ஒரு புத்த மடத்தின் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடம் அந்தப் பகுதியிலேயே சிறப்பு பெற்று விளங்கியது.
தற்போது அதன் மதிப்பு குறைந்து போய்க் கொண்டிருந்தது. அது அவருக்குத் தெளிவாக விளங்கியது.
மடத்தின் உள்ளேயே பிட்சுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதனைக் கண்டு வருத்தமடைந்த அவர், தன்னை விட அனுபவத்தில் சிறந்த தன்னுடைய குருவைத் தேடிப் போனார். அவரிடம் தன் மடத்துப் பிரச்சனையை எடுத்துச் சொன்னார்.
அந்தக் குரு சிறிது நேரம் யோசித்தார். பின்னர், "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு கிடைக்கும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட புத்த மடத்தின் தலைவர் வியப்படைந்தார். அவர் உடனே அங்கிருந்து மடத்திற்குத் திரும்பினார்.
தன்னுடைய குரு சொன்ன விவரத்தை அங்கிருந்த புத்த பிட்சுக்களுக்குச் சொன்னார்.
அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த நிமிடத்திலிருந்து நம்மைச் சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு, மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்தது.
எதையும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்படுத்தினால் வெற்றி தானாகத் தேடி வருவது இயற்கைதானே...!