ஒரு மலைப் பகுதியில் மலை உச்சியில் ஒரு குழுவினரும், கீழ்ப்பகுதியில் மற்றொரு குழுவினரும் வாழ்ந்து வந்தனர்.
இரு குழுவினருக்குமிடையில் தீராத பகையும் இருந்து வந்தது.
ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் கீழ்ப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.
சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலை மேல் இருந்த குழுவினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விடலாம் என்று கீழ்ப்பகுதியிலிருந்த இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.
குழந்தையை மீட்டு வர இளைஞர்கள் சிலர் முன்வந்தனர். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள், எந்தச் செயலையும் எளிதில் செய்து முடிக்கும் மனப்போக்குடையவர்கள். ஊர்ப்பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் மிகச் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் போதிய பயிற்சியில்லாததால் அந்த ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர்.
அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன், “நாங்கள் இந்த மலையில் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நீ எப்படி மலைக்கு ஏறிச் சென்றாய்?" என்று வியப்புடன் கேட்டார்கள்.
அவள் தன் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி, “இது உங்கள் குழந்தை இல்லை,என் குழந்தை. அது ஒன்றுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.