ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார்.
அவரிடம் பயிற்சி பெற்றிட வேண்டுமென்று பல இளைஞர்கள் சேர்ந்தனர்.
அவர்களில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் அனைத்து வில்வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றான்.
வில்வித்தைக்கார துறவிக்கு இணையாக நாமும் வில்வித்தை அனைத்தையும் கற்றுக் கொண்டோம் என்று நினைத்தபடி அவரிடம் விடைபெறுவதற்காக வந்தான்.
துறவி அவனிடம், “வில்வித்தை அனைத்தையும் கற்றுக் கொண்ட உன்னிடம் ஒரு குறை உள்ளது” என்றார்.
அந்த இளைஞன், “என்னிடம் குறை உள்ளதா? அது என்ன குறை?” என்று கேட்டான்.
அந்தக் குறையை நான் உனக்கு நாளை சொல்கிறேன். அதற்கு முன்பாக நீ என்னிடம் வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
இளைஞனும் அதற்கு ஒத்துக் கொண்டான்.
மறுநாள் இருவருக்குமிடையில் வில்வித்தைப் போட்டி தொடங்கியது.
இருவரும் வில்வித்தைக்கான பல போட்டிகளிலும் சமமாக முன்னேறினர்.
தொலைவில் இருந்த ஒரு மரத்தில் குறியிட்டிருந்த சிறு புள்ளியில் சரியாக அம்பைச் செலுத்தினான். பின்னர் அந்த அம்பை மற்றொரு அம்பை எய்து இரண்டாகப் பிரித்துக் காட்டினான் இளைஞன்.
அதைக் கண்டு துறவி அவனைப் பாராட்டினார். பின்னர் அவர் அவனை அழைத்துக் கொண்டு மலைமீது ஏறத் தொடங்கினார்.
இளைஞனும் அவரைப் பின் தொடர்ந்தான்.
அந்த மலையுச்சிக்குச் சென்று விட்ட அவர் அந்த மலையுச்சிக்கும் அடுத்திருந்த மலையுச்சிக்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மரப்பாலம் ஒன்று இருந்தது. அந்தப் பாலத்தின் வழியாக ஒருவர் மட்டுமே செல்லக் கூடியதாக இருந்தது. அதன் கீழ் மிகப் பெரும் பள்ளம். கிழே விழுந்தால் உடலைக் கூட கண்டுபிடிக்க முடியாது.
துறவி அந்த மரப்பாலத்தில் நடந்து சென்று நடுவில் நின்று கொண்டார். இளைஞன் மலைப்பகுதியில் நின்றிருந்தான்.
துறவி தனது வில்லை எடுத்து தொலைவிலிருந்த மரத்தின் கனியை மட்டும் அடித்து வீழ்த்தினார்.
துறவி அங்கிருந்து மலைப்பகுதிக்குத் திரும்பினார். அவர் இளைஞனைப் பார்த்து, “நான் செய்தது போல் மரப்பாலத்தின் நடுவிலிருந்து நான் மரத்தின் கனியை வீழ்த்தியதைப் போல் வீழ்த்து” என்றார்.
இளைஞன் மரப்பாலத்தில் அச்சத்துடன் நடந்து சென்றான். அவனுக்குத் தான் தவறிக் கீழே விழுந்து விடுவோமோ என்கிற அச்சம் அதிகமானது. அவன் கை, கால்கள் அனைத்தும் நடுங்கின. அங்கிருந்து மரத்திலிருக்கும் கனியை நோக்கிக் குறி வைத்தான். அவனால் சரியாக அம்பை எய்திட முடியவில்லை. மூன்று முறை முயற்சித்தும் அவனுக்குத் தோல்வியே கிட்டியது.
அவன் அங்கிருந்து துறவியை நோக்கி வந்தான்.
துறவி அவனிடம், ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, உன் மனதில் இல்லை. இது ஒன்றுதான் உன்னிடம் இருக்கும் குறை. இந்தக் குறை நீங்கி விட்டால் நீ எளிதில் வெற்றி பெறலாம்’ என்றார்.
அவனுக்கு மனதில் நம்பிக்கையும் உறுதியும் பிறந்தது.