கல்லில் சிலை செதுக்கும் சிற்பி ஒருவர் அழகிய சிலை ஒன்றை உருவாக்கிக் கொண்டு இருந்தார்.
அவரின் அருகில் அதே போல் மற்றொரு சிலையும் இருந்தது. செதுக்கிக் கொண்டிருக்கும் சிலையும், அருகிலிருந்த சிலையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.
அந்த வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர், “இரண்டு சிலைகளும் ஒன்றாக இருக்கின்றதே. இரண்டும் வேறு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதா?” என்று கேட்டார்.
சிற்பி, “இல்லை. அருகிலிருக்கும் சிலையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
வழிப்போக்கர் செதுக்கிக் கொண்டிருந்த சிலையையும், அருகிலிருந்த சிலையையும் நன்றாகக் கவனித்து விட்டு, “எனக்கு இரண்டு சிலைக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கீழே கிடக்கும் சிலையில் எந்த சேதம் இருப்பதாகவும் எனது கண்ணுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார்.
சிற்பி, “அந்தச் சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமேற்பட்டுள்ளது.” என்றார்.
வழிப்போக்கரும் அந்தச் சிலையை உற்றுப் பார்த்தார். சிற்பி சொன்னது போல் சிலையின் மூக்குப்பகுதியில் சிறிய அளவிலான சேதம் தெரிந்தது.
“இந்தச் சிலையை எங்கே நிறுவப் போகிறீர்கள்?” என்று கேட்டார் வழிப்போக்கர்.
“அருகிலுள்ள இடத்தில் 50 அடி உயரத்தின் மேலே நிறுவ இருக்கிறோம்” என்றார் சிற்பி.
அதற்கு “ஐம்பதடி உயரத்தில் இருக்கப் போகிற இந்தச் சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்? தேவையில்லாமல் மற்றொரு சிலையை உருவாக்கிக் காலத்தை வீணாக்குகிறீர்களே...” என்றார் வழிப்போக்கர்.
சிற்பி தனது வேலையை நிறுத்திவிட்டு, “யார் கவனிக்கப் போகிறார்கள்? என்கிறது உண்மைதான். இந்தச் சிறிய சேதத்தை நான் சொன்னால் தவிர வேறு யாரும் கண்டறியப் போவதில்லை. எனது கடமையில் ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய குறையை மறைக்க நான் விரும்பவில்லை. என் தொழிலில் ஏற்பட்ட பிழையைச் சரி செய்திடத்தான் மீண்டும் புதிய சிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
சிற்பியின் வெளிப்படையான பேச்சும், அவரின் குறைபாட்டை மறைக்காமல் புதிய சிலையை உருவாக்கும் அவரது நேர்மையையும் பாராட்டினார் அந்த வழிப்போக்கர்.