முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்துத் தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள்.
அவளுடைய அந்த வழக்கம் முல்லாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்று விளங்காமல் தவித்து வந்தார்.
ஒருநாள் முல்லாவுக்கு "கோழி சூப் " தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
" சூப்" தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார்.
மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு பக்கத்து வீட்டுகாரியின் நினைவு வந்தது.
வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் பக்கத்து வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்கிற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது.
" சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்."
சிறிது நேரத்திற்குள் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார்.
பக்கத்து வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
என்ன? என முல்லா விசாரித்தார்.
“உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாம்... அம்மா அதில் கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள்” என்றாள் அந்தச் சிறுமி.
முல்லா பலமாகச் சிரித்தார்.
உள்ளேயிருந்த முல்லாவின் மனைவி ஓடிவந்து " உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"பக்கத்து வீட்டுக்காரி, இவ்வளவு காலமாக நாம் சமையல் செய்யும் போது அதை மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதையும் கூட அவள் எப்படியோ மோப்பம் பிடித்துச் சூப் வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார்” என்று கூறியபடி முல்லா மேலும் பலமாகச் சிரித்தார்.