தூக்கணாங்குருவிகள் இரண்டு ஒரு மரத்தில் கூடு கட்டி, அதில் வசித்து வந்தன.
ஒரு நாள், அவை இரை தேடி வெளியில் பறந்து சென்றன.
அப்போது அங்கு வந்த சிட்டுக்குருவி அந்தத் தூக்கணாங் குருவிக் கூட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. அந்தக் கூட்டுக்குள் நுழைந்து பார்த்தது. அந்தக் கூட்டினுள் செய்யப்பட்டிருந்த வசதிகள் அதற்குப் பிடித்துப் போனது. இந்தக் கூட்டைத் தனது கூடாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டது.
இரை தேடிச் சென்ற தூக்கணாங் குருவிகள் தங்கள் கூட்டிற்குள் சிட்டுக் குருவி ஒன்று தங்கியிருப்பதைப் பார்த்தன.
தூக்கணாங்குருவிகள், இந்தக் கூடு தங்களுடையது என்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்லும்படியும் வேண்டின.
அந்தச் சிட்டுக் குருவி, “ ஆமாம், இந்தக் கூடு நான் வருவதற்கு முன்புதான் உங்கள் கூடு. நான் இங்கு வந்து விட்ட பின்பு இது என்னுடைய கூடு. இங்கிருந்து வெளியேற முடியாது” என்று மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவிகள் இரண்டும் அந்தச் சிட்டுக் குருவியிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தன.
சிட்டுக் குருவி சிறிது கூட இரக்கமில்லாமல் கூட்டை விட்டு வெளியேற முடியாது என்று கூறியது.
தூக்கணாங் குருவிகள் இரண்டும் தங்களுடைய உறவுத் தூக்கணாங்குருவிகளிடம் போய் விவரத்தைச் சொல்லின.
அந்தத் தூக்கணாங் குருவிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தன.
அனைத்துத் தூக்கணாங் குருவிகளும் அருகிலுள்ள குளத்திலிருந்து ஈர மணலை எடுத்து வந்து கூட்டின் வழியை அடைத்து விடுவது என்று முடிவு செய்தன.
அதன்படி அனைத்துத் தூக்கணாங் குருவிகளும் தங்கள் அலகுகளில் சிறிது ஈர மண்ணை எடுத்துக் கொண்டு வந்து கூட்டின் வாயில் பகுதி வழியாக அந்த ஈர மண்ணை உள்ளே போட்டன.
சிட்டுக் குருவியால் வெளியேற முடியாதபடி முழுமையாக அந்தக் கூட்டை அடைத்து விட்டன.
அதற்குள் மாட்டிக் கொண்ட சிட்டுக் குருவி மாண்டது.
அடுத்தவர்களின் உடைமைகளுக்கு ஆசைப்படும் அதிகார பலம் மிக்கவர்களின் நிலை இப்படித்தான் மாட்டிக் கொண்டு ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது.