அர்ஜூனன் காண்டவ வனத்தை அழித்த போது, அதிலிருந்த மயன் எனும் அசுரச் சிற்பி, தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான்.
அர்ஜூனனும் அவனைக் காப்பாற்றுகிறான்.
அந்த அசுரச் சிற்பி அர்ஜூனனிடம், “என்னைக் காப்பாற்றிய தங்களுக்குப் பிரதிபலனாக ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான்.
அதற்கு அர்ஜூனன், “எனக்கு நீ ஒன்றும் செய்ய வேண்டாம். கிருஷ்ணன் என்ன கேட்கிறாரோ அதைச் செய்” என்றான்.
கிருஷ்ணர் தருமருக்கு ஒரு அழகான மண்டபம் கட்டித் தரும்படிக் கேட்கிறார். மயனும் வெகு அழகான மண்டபத்தைக் கட்டித் தருகிறான்.
அந்த மண்டபத்தில் ராஜசூய யாகம் நடக்கிறது. இது வெற்றிகரமாக நடக்க, கிருஷ்ணர் உதவுகிறார்.
எனவே, தருமருக்குக் கிடைத்த அனைத்து உடைமைகளும், வசதிகளும் கிருஷ்ணரால்தான் அவருக்குக் கிடைத்தது என்று கருத வேண்டும்.
மயன் கட்டிய மண்டபத்தையும், ராஜசூய யாகம் நடந்த அழகையும் பார்த்துப் பொறாமையுற்ற துரியோதனன், தருமரை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தானும் ஒரு மண்டபம் கட்டி, தருமரைச் சூதாட்டத்துக்கு அழைக்கிறான்.
தனக்குப் பதில் சகுனி ஆடுவான் என்று துரியோதனன் கூறுகிறான். ஏனெனில் சகுனி கபடமாகச் சூதாடுவதில் வல்லவன்.
அப்பொழுது தர்மர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? “எனக்குப் பதில் கிருஷ்ண்ர் ஆடுவார்” என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் அவருக்குக் கிடைத்த அத்தனை வசதிகளும் கிருஷ்ணரால்தானே கிடைத்தது?
ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை. அவர் தம் நன்றிக் கடனை மறந்தார். அதன் காரணமாகத் தோல்வியுற்றார்.
சாதாரணமாக தருமர் நன்றிக் கடனை மறப்பவர் இல்லை. ஆனால், அந்த சமயம் நன்றி மறந்ததற்குக் காரணம் என்ன?
அவர் சூதாட்டம் தொடங்கும் முன் சொல்வது போல், “விதி வலியது. நான் விதியின் வசம் இருக்கிறேன்” என்பதுதான்.