மழை அதிகமாகப் பெய்தது. அங்கிருந்த ஏரி நிறைந்து விட்டது. மழை நீரின் வரவால் அந்த ஏரி நீர் நன்றாகக் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்று கிணற்றுக்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை, புதிய ஏரித் தவளையை வரவேற்றது. அது சேர்த்து வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. இது கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் பிடிக்கவில்லை.
'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறா?' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட வேண்டுமென்று முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.
அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை போன்ற பிற உயிரினங்களும் உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற நீர்நிலையில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'ஏரி என்பது இந்தக் கிணற்றைவிட பல மடங்குப் பெரியதாக இருக்கும்' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை இந்த உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. அங்கு இருந்த மற்ற தவளைகளும் அதை நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை இங்கே வைத்திருந்தால் எங்களுக்கு ஆபத்து வந்து சேரும்' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுப்பதற்காக ஒரு பெண் மேலிருந்து கயிற்றில் கட்டிய வாளியைக் கிணற்றில் இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்தது ஏரித் தவளை.
வாளித் தண்ணீருடன் மேலே சென்றது. அங்கிருந்து தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.