வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துக்கு ஒரு பூனையின் உதவி கோரும் குரல் கேட்டதும் அப்படியே கீழே இறங்கி வந்தது.
அங்கே ஒரு குளக்கரை ஓரத்தில் சகதியும் சேறுமாக இருந்த இடத்தில் சிக்கிக் கொண்ட பூனை அதிலிருந்து வெளியேற முடியாமல் கத்திக் கொண்டிருந்தது.
பூனையை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற விரும்பியது பருந்து.
உடனே பூனையின் தலயின் மேல் சற்று உயரமாகப் பறந்தபடி, "பூனையாரே! கவலை வேண்டாம். எனது கால்களைப் பலமாகப் பிடித்துக் கொண்டால் உம்மைப் பிடித்தபடி மேலே பறந்து உம்மைக் காப்பாற்றி விடுகிறேன்." என்றது.
பூனையின் முன்னே பருந்து தனது கால்களை நீட்டியபடி மேலே பறந்தது.
பருந்தைப் பார்த்த பூனையின் நாக்கில் எச்சில் ஊறியது.
தான் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தது. பருந்தைப் பிடித்து அதன் ருசியான சதைக்கறியை தின்றால் எப்படி இருக்கும்? என்ற எண்ணத்துடன் பருந்தின் காலைப் பிடிக்காமல் இறக்கையைப் பிடித்துக் கொண்டது.
இதை எதிர்பார்க்காத பருந்து பூனையின் தவறான எண்ணத்தைப் புரிந்து கொண்டு தனது கூரிய அலகால் பூனையின் தலையில் ஓங்கிக் கொத்தியது.
வலி தாங்க முடியாத பூனை பருந்தின் இறக்கையை விட்டதால் மீண்டும் சகதிக்குள் விழுந்தது.
பூனையின் பிடியில் இருந்து விடுபட்ட பருந்து சற்று மேலே பறந்தபடி, "பூனையாரே, உம்மை ஆபத்து நேரத்தில் காப்பாற்ற வந்த என்னைக் கொன்று தின்னத் துணிந்த உனக்கு மரணம் ஒன்றுதான் முடிவு" என்றது.
இந்த உலகில் இந்தப் பூனையைப் போல், சில மனிதர்கள் தாம் ஆபத்திலிருந்தாலும் உதவ வந்தவர்களைப் பலியாக்கி விடுகிறார்கள். சில மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக உழைப்பவர்களைச் சுரண்டி அவர்கள் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டு விடுகிறார்கள். இவர்களை எல்லாம் பருந்தைப் போல் கொத்தித்தான் ஆக வேண்டும்.