ஒரு நரியும், ஒரு கொக்கும் நண்பர்களாக இருந்தன.
ஒரு நாள் நரி கொக்கைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தது. விருந்து நாளன்று சுவையான விருந்து தருவதாகவும் சொன்னது.
கொக்கு நரியின் வேண்டுகோளை ஏற்று அது அழைத்த நாளன்று விருந்துக்குச் சென்றது.
நரிக்குக் கொக்கை எப்படியும் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
நரி ஒரு தட்டில் பாயாசத்தை ஊற்றி வைத்து, நாமிருவரும் இந்தப் பாயாசத்தை நக்கிச் சாப்பிடலாம் என்று கொக்கைப் பார்த்துச் சொன்னது.
கொக்குவால் அதன் நீண்ட அலகைக் கொண்டு நக்கிச் சாப்பிட முடியாது என்று தெரிந்தே நரி அப்படிச் செய்தது.
நரி கொக்கை வேடிக்கை பார்க்க வைத்தபடி அந்தத் தட்டிலிருந்த பாயாசம் முழுவதையும் நக்கிச் சாப்பிட்டு விட்டது.
பின்னர் கொக்கைப் பார்த்து, “கொக்கே, நான் பாயாசம் முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். தங்களுக்கு பாயாசம் பிடிக்காது என்று தெரிந்திருந்தால் வேறு ஏதாவது சுவையான உணவு தயாரித்திருப்பேனே!” என்றது.
கொக்கு நரிக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் திரும்பியது.
மற்றொரு நாள், கொக்கு நரியைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தது.
கொக்கு சுவையான பாயாசம் தயாரித்து, அந்தப் பாயாசத்தை ஒரு அகலம் குறைவான வாய் கொண்ட குடுவையில் ஊற்றி வைத்து இருந்தது.
கொக்கு நரியிடம், “நரியாரே! இந்தக் குடுவையில் இருக்கும் பாயாசத்தை நாம் இருவரும் உறிஞ்சிச் சாப்பிடலாம்” என்று சொல்லியபடி அந்தக் குடுவையிலிருந்த பாயாசம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்து விட்டது.
பின்னர் நரியைப் பார்த்து, “நரியாரே! நான் பாயாசம் முழுவதையும் குடித்து விட்டேன். நீங்கள் சிறிது கூட குடிக்கவில்லையே... தங்களுக்குப் பாயாசம் பிடிக்காது என்று முன்பே தெரிந்திருந்தால் வேறு சுவையான உணவைத் தயாரித்திருப்பேனே...!” என்றது.
அன்று தான் ஏமாற்றியதற்கு கொக்கு இன்று நம்மைச் சரியாக ஏமாற்றி விட்டது என்று நரி நினைத்துக் கொண்டு கொக்கிடம் மன்னிப்பு கேட்டது.