கடவுள் உலகைப் படைத்த போது ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதனுடைய வயதை நிர்ணயித்தார்.
முதலில் அவர் முன்பு கழுதை வந்து நின்றது.
“உனக்கு நாற்பது வயது” என்றார் கடவுள்.
“மிக்க மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டுக் கழுதை அப்பால் சென்றது.
பிறகு நாய் அவர் முன்னால் வந்து நின்றது.
“உனக்கும் நாற்பது வயது” என்றார் கடவுள்.
“மிக்க மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு அதுவும் நகர்ந்தது.
பிறகு ஆந்தை அவர் முன் வந்தது.
“உனக்கும் நாற்பது வயது” என்றார் கடவுள்.
“மிக்க மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு அதுவும் அங்கிருந்து சென்றது.
பிறகு மனிதன் கடவுள் முன் வந்து நின்றான்.
“உனக்கும் நாற்பது வயது” என்றார் கடவுள்.
“மிக்க மகிழ்ச்சி” என்று மனிதன் சொல்வான் என்று கடவுள் எதிர்பார்த்தார். ஆனால், மனிதன் அப்படிச் சொல்லவில்லை. அதற்குப் பதில், எல்லோரையும் போல எனக்கும் நாற்பது வயது கொடுத்திருக்கிறீர்களே, அது எப்படிப் போதும்? நான் பெரியவன் ஆவதற்கே இருபது வருடங்கள் பிடிக்கும். அதற்குப் பிறகு உலக அனுபவம் பெறுவதற்கு இன்னும் இருபது வருடம் ஆகும். அதற்குப் பிறகு தங்களை வேண்டுவதற்கு எனக்கு எங்கே நேரம்?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட கடவுள் யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கழுதை அங்கு வந்தது.
அது, “கடவுளே! தாங்கள் எனக்குக் கொடுத்த நாற்பது வயது அதிகம் என்று தோன்றுகிறது. மக்கள் என்னை அழுக்கு மூட்டை சுமக்கும்படி வற்புறுத்துகிறார்கள். என்னை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். சாப்பிடவும் ஒன்றும் கொடுப்பதில்லை. ஆகவே, தயவு செய்து என் ஆயுட்காலத்தைக் குறைத்து விடுங்கள்” என்றது.
உடனே கடவுள் கழுதையின் வயதை இருபதாகக் குறைத்து, மீதி இருபது ஆண்டுகளை மனிதனின் ஆயுளுடன் சேர்த்தார்.
கழுதை தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு அப்பால் சென்றதுதான் தாமதம், நாய் கடவுளைப் பார்க்க வந்து சேர்ந்தது.
“கடவுளே, எனக்குத் தாங்கள் கொடுத்த நாற்பது வயது அதிகம். நான் இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்து என் முதலாளியின் பொருள்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. சிறு பிள்ளைகள் என்னைக் கண்டதும் கல்லை விட்டெறிகிறார்கள். ஆகவே, இந்த வாழ்க்கையை என்னால் நாற்பது வருட காலம் தாங்க முடியாது. என் ஆயுளைக் குறைத்து விடுங்கள்” என்றது.
உடனே கடவுள் நாயின் வயதை இருபதாகக் குறைத்து மீதி இருபது வருடங்களை மனிதனின் ஆயுளோடு சேர்த்தார்.
நாய் தன் நன்றியைத் தெரிவித்து அங்கிருந்து நகன்றது.
அடுத்து ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது.
அது, “இறைவனே எனக்கு ஏன் நாற்பது வருட ஆயுளைக் கொடுத்தீர்கள்? என்னைக் கண்டாலே சகுனத் தடை என்கிறார்கள். பகலிலோ எனக்குக் கண்கள் தெரியவில்லை. எனவே என் நீண்ட ஆயுளைக் குறைத்து உதவுங்கள்” என்றது.
உடனே கடவுள், “உன் ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்து விட்டேன். மீதி இருபது வருடங்களை மனிதனுக்குக் கொடுத்து விட்டேன்” என்றார்.
தனக்கு நூறு வருட ஆயுள் கிடைத்தது குறித்து மனிதம் மகிழ்ச்சியடைந்தான்.
ஆனால் என்ன ஆயிற்று தெரியுமா?
நாற்பது வயது வரை மனிதன் மனிதனாக இருக்கிறான். அதன் பின்பு இருபது வருடங்கள் கழுதையைப் போல் சோம்பேறியாகி விட்டான். பிறகு அறுபதிலிருந்து எண்பது வயது வரை நாயைப் போல் பிறரைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்தான். கடைசி இருபது வருடங்கள் ஆந்தையைப் போல் பார்வையிழந்து, அனைவராலும் இகழப்பட ஆரம்பித்தான்”