காட்டின் வழியே ஒரு நரி சென்று கொண்டிருந்தது. அது இரு மரங்களுக்கிடையே சென்ற போது அதன் வால் அகப்பட்டுக் கொண்டது. அது வேகமாக வாலை விடுவிக்க முயன்ற போது அதன் வால் அறுந்து போய் விட்டது.
வால் இழந்த நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அனைத்து நரிகளுக்கும் தன்னைப் போலவே வாலில்லாமல் போய் விட்டால் தன்னை யாரும் குறைபாடாகப் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தது.
எனவே ஒரு நாள் அது அனைத்து நரிகளையும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வரவழைத்தது.
அந்தக் கூட்டத்தில் அந்த வாலறுந்த நரி, “உறவினர்களே, வாலை வைத்துக் கொண்டு தவிக்கும் உங்களைப் பார்த்து நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். இந்த வால் இருப்பதால் நாம் எத்தனை இன்னல்களுக்கு ஆளாகிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மைப் பின் தொடரும் நாய்கள் நம் வாலைக் கொண்டே நம்மைப் பிடித்து விடுகின்றன. கீழே உட்கார்ந்து பேசலாமென நினைத்தால் அதற்கு இந்த வால் இடையூறாக இருக்கிறது. உண்மையில் இந்த வாலினால் ஏதாவது பயனிருக்கிறது என்றால் மனிதனுக்கு கடவுள் ஏன் வாலைப் படைக்கவில்லை. எனவே நீங்கள் அனைவரும் உங்களுடைய வாலை வெட்டிக் கொண்டால் மிகவும் நன்றாக என்னைப் போல் செயல்பட முடியும். நான் இதை என் அனுபவத்தினால் உணர்ந்து சொல்கிறேன்” என்று நீண்ட பிரசங்கம் செய்தது.
அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒரு கிழ நரி எழுந்து, “வாலில்லாத நரியே, வால் வேண்டாம் என்கிற பிரசங்கத்தை உனக்கு வாலிருக்கும் போதே செய்திருந்தால் நாங்கள் உன்னை நம்பி இருப்போம். வாலில்லாத நீ செய்யும் பிரசங்கத்தை எங்களால் ஏற்க இயலாது. எங்களை ஏமாற்ற வேண்டாம்” என்றது.