ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் இந்திரன். மற்றவன் பெயர் சந்திரன்.
மூத்தவனான இந்திரன் திருட்டுக் குணம் படைத்தவன்.பிறரை எப்படியும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவன்.
இளையவனான சந்திரனோ மிக்வும் நல்லவன். யார் எதைச் சொன்னாலும் அப்படியே அதை நம்பிவிடும் குணமுடையவன்.
அவர்களுடைய தந்தை இறந்த பின்பு, மூத்தவனான இந்திரன் சந்திரனை அழைத்து, “நம் தந்தையின் சொத்துக்களை இரண்டாகப் பிரிக்காமல் புதிய முறையில் பகிர்ந்து கொள்ளலாம்” என்றான்.
இளையவனான சந்திரனும் அதற்குச் சம்மதித்தான்.
”நம் வீட்டிலுள்ள தடிமனான கம்பளி இருக்கிறதல்லவா, அது பகல் முழுவதும் உன்னிடம் இருக்கட்டும். இரவெல்லாம் எனக்குச் சொந்தமாக இருக்கட்டும். நம் தோட்டத்தில் இருக்கும் மரங்களின் அடிப்பாகமெல்லாம் உனக்குச் சொந்தம். மேல்பாகம் எல்லாம் எனக்குச் சொந்தம். நம் வீட்டிலுள்ள பசு மாட்டின் முன் பகுதி உனக்குச் சொந்தம், பின்பகுதி எனக்குச் சொந்தம்” என்றான் இந்திரன்.
சந்திரனும் அதற்கு சம்மதித்தான்.
இளையவன் சந்திரன் பகலெல்லாம் கம்பளியைத் தான் வைத்துக் கொள்வான். ஆனால் பகலில் அதைப் போர்த்திக் கொள்ள முடியுமா? அதை நன்றாக வெயிலில் காயப் போடுவான். இந்திரன் அதை இரவில் நன்றாகப் போர்த்திக் கொண்டு தூங்குவான். இளையவனான சந்திரனோ குளிரில் நடுங்கிக் கொண்டு படுத்திருப்பான்.
தோட்டத்தின் மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது இளையவன் சந்திரனின் வேலையாக இருந்தது. ஏனெனில், அவனுக்குத்தான் மரத்தின் அடிப்பாகம் சொந்தமாக இருந்ததே. மூத்தவன் இந்திரன் மரங்களின் மேல் பாகத்திலிருக்கும் பழங்களைப் பறித்து உண்பான்.
பசுமாட்டுக்குத் தீனி வைப்பது இளையவன் சந்திரனின் வேலையானது. அந்த மாட்டிலிருந்து கிடைக்கும் பாலைக் கறந்து குடிப்பான் மூத்தவன் இந்திரன்.
இது இளையவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அண்ணனிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவன் அதைக் கண்டு கொள்ளவேயில்லை.
“நாம் இருவரும் இந்த மூன்று சொத்துக்களையும் சம்மதித்துத்தானே பங்கிட்டுக் கொண்டோம். இப்பொழுது நீ இப்படிக் குறைப்படுவதில் பொருள் ஏதுமில்லை” என்றான் இந்திரன்.
இதைக் கேட்ட சந்திரன் மிகவும் வருத்தமடைந்தான்.கவலையாக அமர்ந்திருந்தான்.
சந்திரன் வருத்தமாக இருப்பதைப் பார்த்த கிழவி ஒருத்தி அவனிடம் வருத்தத்திற்கான காரணத்தினை விசாரித்தாள்.
சகோதரர்களுக்கிடையில் செய்து கொண்ட பாகப் பிரிவினையைப் பற்றிச் சொல்லி, இதனால் தான் பாதிப்படைவதைப் பற்றியும் சொன்னான்.
உடனே கிழவி சொன்னாள், “உன் அண்ணன் உன்னை எப்பொழுது ஏமாற்ற வேண்டுமென்று திட்டமிட்டு விட்டானோ, அவனை நீயும் ஏமாற்றித்தான் ஆக வேண்டும். அதற்கு உனக்கு ஒரு புதிய வழியைச் சொல்லிக் கொடுக்கிறேன்” என்றாள்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் சந்திரன்.
“உனக்குப் பகல் பொழுதில் சொந்தமான கம்பளியை தண்ணீரில் நன்றாக நனைத்து வைத்துவிடு. மாலை ஆனதும் அந்தக் கம்பளியை இரவில் உன் அண்ணனிடம் கொடு. மரங்களின் அடிப்பாகம் உனக்குச் சொந்தமானதால், உன் அண்ணன் மரத்தின் மேலிருக்கும் பழங்களைப் பறிக்கும் சமயத்தில் அடிப்பாகத்தைக் கோடாலியைக் கொண்டு வெட்டுவதைப் போல் செய். பசு மாட்டின் முன் பகுதி உனக்குச் சொந்தமானதால், அவன் பசு மாட்டில் பால் கறக்கும் போதெல்லாம் பசுமாட்டின் முன்பகுதியில் அடி. அப்புறம் என்ன நடக்குதென்று பார்” என்றாள் அந்தக் கிழவி.
கிழவி சொன்னபடி சந்திரன் செய்தான்.
கம்பளி ஈரமாக இருந்ததால் இந்திரனால் அதைப் பயன்படுத்த முடியாமல் குளிரில் நடுங்கத் தொடங்கினான். அவன் பழம் பறிக்க மரத்திலேறும் பொழுது சந்திரன் மரத்தின் அடிப்பாகத்தை வெட்டப் போனான், இதைக் கண்டு பயந்து போன் அவன் மரத்தில் பழம் பறிக்காமல் கீழே இறங்கி விட்டான். பசு மாட்டில் அவன் பால் கறக்க முற்பட்ட போது மாட்டை அடித்தான். இதனால், பசு மாடு பால் கொடுக்காமல் அவனை உதைத்துத் தள்ளியது.
உடனே இந்திரன், “நான் உன்னை ஏமாற்றியது தவறுதான். இனி நாமிருவரும் கிடைப்பதைச் சமமாகப் பகிர்ந்து கொள்வோம்” என்றான்.