வழிப்போக்கன் ஒருவன் பகல் முழுவதும் நடந்த களைப்பினாலும், இரவில் கடுங்குளிரில் வெளியில் தங்க முடியாது என்பதாலும் அங்கிருந்த ஒரு கூரை வீட்டின் கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த வீட்டுக்காரனிடம், “அய்யா, நான் பகல் முழுவதும் நடந்து வந்ததால் மிகவும் களைப்பாக இருக்கிறது. மேலும் வெளியில் குளிர் அதிகமாக இருக்கிறது. இன்று ஒரு நாள் இரவு மட்டும் எனக்கு உண்ண உணவும், இருக்க இடமும் அளித்தால் போதும். நான் அதற்கான பணத்தைத் தங்களிடம் கொடுத்து விடுகிறேன்” என்றான்.
அதற்கு அந்த வீட்டுக்காரன், “உனக்குச் சாப்பாடு போட்டு, தங்குவதற்கு இடமளிப்பதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையுமில்லை. ஆனால், எனக்கு நீ தருவதாகச் சொன்ன பணம் வேண்டாம். அதற்குப் பதிலாக நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்ல வேண்டும். தவறான பதிலைச் சொன்னால் உன் கன்னத்தில் ஒரு அறை அறைவேன்” என்றான்.
வழிப்போக்கனுக்கும் வேறு வழி தெரியாததால் அதற்கு ஒத்துக் கொண்டான்.
வீட்டுக்காரன் வழிப்போக்கனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போட்டான். தானும் வயிறு நிறையச் சாப்பிட்டான்.
பிறகு இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில், வீட்டுக்காரன், ஒரு மூலையில் படுத்திருந்த ஒரு பூனையைச் சுட்டிக் காட்டி, “அது என்ன?” என்று கேட்டான்.
“அது பூனை” என்றான் வழிப்போக்கன்.
உடனே வீட்டுக்காரன் வழிப்போக்கனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்து, “உன் பதில் தவ்று. அது பூனையல்ல. வெண்மை” என்றான்.
சிற்து நேரத்திற்குப் பின்பு வீட்டுக்காரன் அங்கிருந்த மண்பானையிலிருந்து தண்ணீரை எடுத்துக் காண்பித்து, “இது என்ன?” என்று கேட்டான்.
வழிப்போக்கன், “தண்ணீர்” என்றான்.
உடனே வீட்டுக்காரன் வழிப்போக்கனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்து, “உன் பதில் தவறு. அது தண்ணீரில்லை. சுத்தம்” என்றான்.
சிறிது நேரம் கழிந்த பின்பு வீட்டுக்காரன், அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைச் சுட்டிக் காட்டி, “அது என்ன?” என்று கேட்டான்.
வழிப்போக்கன், “நெருப்பு” என்றான்.
உடனே வீட்டுக்காரன் வழிப்போக்கனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்து, “உன் பதில் தவறு. அது நெருப்பில்லை. சுகம்” என்றான்.
சிறிது நேரத்திற்குப் பின்பு வீட்டுக்காரன் பரணைச் சுட்டிக்காட்டி, “அது என்ன?” என்று கேட்டான்.
வழிப்போக்கன், “பரண்” என்றான்.
உடனே வீட்டுக்காரன் வழிப்போக்கனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்து, “உன் பதில் தவறு. அது பரணில்லை. உயரம்” என்றான்.
பாவம் வழிப்போக்கனுக்கு வலி பொறுக்க முடியவில்லை.
எனவே அவன் வீட்டுக்காரனைப் பார்த்து, “என் மூளை மழுங்கிப் போய் விட்டது என்று நினைக்கிறேன். உன் கேள்விக்கு என்னால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. நான் சிறிது நேரம் வெளியில் அமர்ந்து என்னை அமைதிப்படுத்திக் கொண்டு வருகிறேன். அதன் பிறகாவது நீ கேட்கும் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொல்ல முடிகிறதா? என்று பார்க்கிறேன்” என்றான்.
வீட்டுக்காரனும் அதற்குச் சம்மதிக்க அவன் வெளியில் சென்று அமர்ந்தான்.
அவன் வெளியே வந்த சமயம் அந்தப் பூனையும் வெளியே வந்து அவனருகில் அமர்ந்தது.
மிகவும் கோபமாக இருந்த அந்த வழிப்போக்கன் அந்தப் பூனையைப் பிடித்து அதன் வாலில் சில சுள்ளிகளைக் கட்டி, அதற்கு நெருப்பு வைத்தான். நெருப்பு வைக்கப்பட்ட பூனையை வீட்டினுள் விட்டான். நெருப்பைக் கண்டு பயந்த பூனை பரண் மீது தாவிற்று.
உடனே அந்த வழிப்போக்கன் வீட்டுக்குள் வந்து வீட்டுக்காரனைப் பார்த்து, “வெண்மை சுகத்தை எடுத்துக் கொண்டு உயரத்திற்குப் போயிருக்கிறது. ஆகவே சுத்தத்தைக் கொண்டு சுகத்தை அகற்று” என்றான்.
வீட்டுக்காரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். “நீ என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த வழிப்போக்கன் வீட்டுக்காரன் கன்னத்தில் ஒரு அறை அறைந்து, “இவ்வளவுதானா உன் புத்திசாலித்தனம்!உன் வீட்டுப் பூனை நெருப்புடன் பரணிற்குச் சென்றிருக்கிறது. வீடு நெருப்பு பற்றி எறிவதற்கு முன்பு தண்ணீர் கொண்டு அதை அணைக்க முயற்சி செய்” என்றபடி அங்கிருந்து வெளியேறினான்.