ஐசன் ஹாவர் என்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்று வெள்ளை மாளிகையில் குடியேறியதும் தனது அலுவலக அறையில் ஒரு துடைப்பத்தை (விளக்குமாறு) ஒரு கண்ணாடியிட்ட அலமாரியில் அனைவரது பார்வையிலும் படும்படி வைத்திருந்தார்.
அவரைப் பார்க்க வரும் எல்லோரும் அந்தத் துடைப்பத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஆனால், அது ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது? என்று கேட்க எல்லோரும் பயப்படுவார்கள். இதை ஐசன் ஹாவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.
ஒருமுறை அவரைப் பார்க்க பல முக்கியப் புள்ளிகள் அந்த அறையில் கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் அந்தத் துடைப்பத்தைப் பார்த்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட அந்தத் துடைப்பம் அங்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்கவில்லை.
இதைக் கவனித்த ஐசன் ஹாவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் அனைவரும் இங்கிருக்கும் துடைப்பத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்களே தவிர, இது ஏன் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் கூட கேட்கவில்லை. இருந்தாலும் நான் இதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் எனக்குப் பல விலையுயர்ந்த பரிசுப் பொருள்களெல்லாம் வந்திருந்தன. அவையெல்லாம் தனியறை ஒன்றில் பூட்டி வைத்திருக்கிறேன். அப்படி அனுப்பப்பட்ட பரிசுப் பொருள்களில் இந்தத் துடைப்பமும் ஒன்று. இந்தத் துடைப்பத்துடன் ஒரு கடிதமும் வந்திருந்தது. அந்தக் கடிதத்தில்,“நீங்கள் அரசியலில் உள்ள குப்பை, கூளங்களைச் சுத்தம் செய்வதற்காக இதை அனுப்பி வைத்திருக்கிறேன்” என்று இருந்தது. அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த செயல் எனக்கு நினைவிருக்க வேண்டுமென்பதற்காகத்தான் அதை இங்கு பார்வையில் படும்படி வைத்திருக்கிறேன்” என்றார்.