முன்பொரு காலத்தில் பாரசீக நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் தன்னைச் சுற்றிலும் அமர்ந்திருந்த அறிஞர்களைப் பார்த்து, “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான்.
முதலாவதாக எழுந்த அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர். உயிர் இல்லையேல் இந்த வாழ்க்கையில் நாம் எதை அனுபவிக்க முடியும்?” என்றார்.
இரண்டாவதாக இருந்த அறிஞர், “என் கருத்துப்படி வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் அறிவுதான். அறிவு இல்லாமல் நாம் வாழ முடியாது” என்றார்.
மூன்றாவதாக ஒரு அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் பொறுமைதான். பொறுமையின்றி இந்த வாழ்க்கையில் எந்தப் பெருமையையும் அடைய முடியாது” என்றார்.
நான்காம் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் சூரியன்தான். சூரியன் இல்லையெனில் இந்தப் பூமியில் எந்த உயிரும் வாழ முடியாது” என்றார்.
ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் அன்புதான். மனிதர்களுக்கிடையில் அன்பு இல்லையெனில் ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டு அடித்துக் கொண்டு தங்களை மாய்த்துக் கொள்வார்கள்” என்றார்.
ஆறாவதாக ஒரு அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான். நமக்குக் காலம் இல்லையெனில் உயிர் இருந்து என்ன பயன்? அறிவைப் பயன்படுத்த ஏது நேரம்? பொறுமையாக இருக்க ஏது அவகாசம்? சூரியனைப் பயன்படுத்த ஏது காலம்? அன்பு காட்ட ஏது நேரம்? எனவே காலம்தான் மிக மதிப்புயர்ந்த பொருள் காலம்தான். ஆனால், அதைத்தான் நாம் பலரும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.