பறவைகளைப் பிடிப்பதற்காக ஒரு வேடன் வலை விரித்து வைத்திருந்தான். அந்த வலையில் இரண்டு பறவைகள் சிக்கிக் கொண்டன. சிறிது நேரத்திற்கெல்லாம் வேடன் தூரத்தில் வருவதை இரண்டு பறவைகளும் பார்த்தன.
உடனே இரண்டு பறவைகளும் கலந்து பேசின. உடனே வலையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தன.
இதைக் கண்ட வேடன் அந்த வலையைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த முனிவர் ஒருவர் வேடனைப் பார்த்து, “எதற்காக வீணாக அந்தப் பறவையின் பின்னால் ஓடுகிறாய்! அவை இனி உனக்கு அகப்படாது” என்றார்.
அதற்கு வேடன், “அப்படியில்லை சுவாமி, இந்தப் பறவைகள் இப்போது ஒற்றுமையாக இருக்கின்றன. எனவே வலையைத் தூக்கிக் கொண்டு பறக்கின்றன. ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் அவைகளுக்கிடையில் ஒற்றுமை குறைந்து, சண்டை வந்து விடும். அப்பொழுது அந்த வலையுடன் இந்தப் பறவைகளும் சேர்ந்து கீழே விழுந்து விடும். அதை எதிர்பார்த்துத்தான், நான் பின்னால் ஓடுகிறேன்” என்றான்.
பறந்து கொண்டிருந்த பறவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டு பறவைகளும் வலையைத் தூக்கிக் கொண்டு பறந்ததால் களைத்துப் போய்விட்டன.
“கிழக்கே ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அங்கு என் நண்பர்கள் இருக்கிறார்கள். அங்கு பறந்து சென்றால் நாம் தப்பித்துக் கொள்ளலாம்” என்றது ஒரு பறவை.
“அந்த மரம் வேண்டாம். மேற்கே ஒரு மரம் இருக்கிறது. அங்கேதான் என் நண்பர்கள் இருப்பார்கள், நாம் அந்த மரத்திற்குச் செல்லலாம்” என்றது மற்றொரு பறவை.
இரண்டு பறவைகளும் தாங்கள் விரும்பிய இடத்திற்கே செல்ல வேண்டும் என்று சண்டையிட்டதால், அவைகளின் பறக்கும் வேகம் குறையத் தொடங்கியது. வலையும் கீழே இறங்கியது. வலை கீழே இறங்கியதும், பறவைகளின் இறக்கைகள் வலையில் சிக்கிக் கொண்டன. அதன் பிறகு இரண்டு பறவைகளாலும் பறக்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் வலையுடன் இரண்டு பறவைகளும் கீழே விழுந்தன.
ஒற்றுமையின்மை காரணமாக அந்த இரண்டு பறவைகளும் வேடனிடம் சிக்கிக் கொண்டன.