மனிதன் உடலில் மூச்சு, பேச்சு, பார்வை, செவிப்புலன், மனம் என்னும் ஐந்து உயிர்த் தத்துவங்கள் இருக்கின்றன.
ஒரு நாள் அவைகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டன. நான்தான் பெரியவன் என்று ஒவ்வொன்றும் சொல்லிக் கொண்டன.
இந்தச் சண்டையினை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று ஐந்தும் பிரம்மாவிடம் சென்றன.
“சுவாமி, எங்கள் ஐவரில் யார் பெரியவர்?என்று நீங்களே சொல்லுங்கள்” என்று அவரிடம் கேட்டன.
அவர், “இதைக் கண்டறிய ஒரு நல்ல வழி இருக்கிறது. உங்களில் யார் மனிதன் உடலை விட்டுப் போனால் அந்த மனித உடலுக்குத் தீங்கு ஏற்படுகிறதோ அவர்தான் பெரியவர்” என்றார்.
ஐந்து உயிர்த் தத்துவங்களும் அவர் சொல்படியே செய்து பார்ப்பதென முடிவு செய்தன.
முதலில் பேச்சு மனிதன் உடலை விட்டுச் சென்றது. ஒரு வருடம் கழிந்த பின்பு அது மீண்டும் உடலுக்குத் திரும்பியது.
பேச்சு, “நான் உன்னை விட்டு ஒரு வருட காலம் பிரிந்திருந்தேனே, அதனால் உனக்கு என்ன நேர்ந்தது?” என்று உடலைப் பார்த்துக் கேட்டது.
“ஒன்றும் நேரவில்லை, மற்றவர்களைப் போல பேச முடியவில்லை, அவ்வளவுதான்” என்றது உடல்.
அடுத்து பார்வை உடலை விட்டுச் சென்று, பின்னர் ஒரு வருடம் கழித்துத் திரும்பியது.
பார்வை, “நான் உன்னை விட்டு ஒரு வருட காலம் பிரிந்திருந்தேனே, அதனால் உனக்கு என்ன நேர்ந்தது?” என்று உடலைப் பார்த்துக் கேட்டது.
அதற்கு உடல், “மற்றவர்களைப் போல பார்க்க முடியவில்லை, அவ்வளவுதான். வேறொன்றும் நிகழவில்லை” என்றது.
பிறகு செவிப்புலன் ஒரு வருட காலம் உடலை விட்டுச் சென்று திரும்பியது.
அதுவும், “நான் உன்னை விட்டு ஒரு வருட காலம் பிரிந்திருந்தேனே, அதனால் உனக்கு என்ன நேர்ந்தது?” என்று உடலைப் பார்த்துக் கேட்டது.
உடல், “எனக்கு ஒன்றும் அதிகப் பாதிப்பில்லை, என்னால் பிறர் சொல்வதைக் கேட்க முடியவில்லை அவ்வளவுதான்” என்றது.
அதன் பின்னர் மனம் அந்த உடலை விட்டு ஒரு வருட காலம் பிரிந்து சென்று திரும்பியது.
மனம், “நான் உன்னை விட்டு ஒரு வருட காலம் பிரிந்திருந்தேனே, அதனால் உனக்கு என்ன நேர்ந்தது?” என்று உடலைப் பார்த்துக் கேட்டது.
“ஒன்றும் பாதிப்பில்லை, நீ இல்லாததால் எனக்கு அதிகத் தீங்கு ஒன்றும் விளையவில்லை. வாய் பேசியது, கண் பார்த்தது, காது கேட்டது, மூக்கு மூச்சு விட்டது. நான் சிந்திக்கும் திறனின்றி ஒரு குழந்தையைப் போல் இருந்தேன். அவ்வளவுதான்” என்றது.
இதைக் கேட்ட மனம் அதிருப்தியடைந்தது.
கடைசியில் மூச்சு உடலைப் பார்த்து, “நான் ஒரு வருட காலம் போய்விட்டுத் திரும்புகிறேன்” என்றது. அது கிளம்பிய போது, மற்ற நான்கு சக்திகளும் தங்களது செயலை இழக்க ஆரம்பித்தன.
மூச்சைப் பார்த்து, “நீ எங்களை விட்டுப் போகாதே...” என்று கெஞ்சத் தொடங்கின.
இறுதியாக மூச்சுதான் உடலில் உயர்ந்தது என்று அவைகள் அனைத்தும் ஒத்துக் கொண்டன.