யயாதி மன்னனுடைய பேரர்களுள் ஒருவர் பிரதர்தனன்.
அவனுடைய அரண்மனையில் நாரதர் சில நாட்கள் தங்க நேரிட்டது. அப்பொழுது அவன் நாரதருக்குத் தேவையான பணிவிடைகள் செய்தும், வழிபாடுகள் செய்தும் மிகுந்த புண்ணியம் பெற்றான்.
ஒருநாள் அவன் நாரதரை நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஏற்றிக் கொண்டு நகருக்கு வெளியே சென்றான்.
அவன் செல்லும் பொழுது எதிரில் வந்த அந்தணன் ஒருவன் அரசனை நோக்கி, “எனக்கு ஒரு குதிரை வேண்டும்!” என்று வேண்டினான்.
உடனே பிரதர்னன் மிகுந்த அமைதியுடன் “அரண்மனைக்கு வா, நான் உனக்கு ஒரு குதிரை கொடுத்தனுப்புகிறேன்” என்றான்.
அந்தணன் அதற்கு இசையவில்லை. தனக்கு உடனே குதிரையைத் தரும்படி கோரினான்.
அரசனும் அந்தத் தேரில் கட்டியிருந்த குதிரைகளில் ஒன்றை அவிழ்த்து அந்த அந்தணனுக்குக் கொடுத்தனுப்பினான்.
அடுத்து அவன் செல்லும் வழியில் மற்றொரு அந்தணன் வந்தான். அவனும் தனக்குக் குதிரை ஒன்று வேண்டுமென்று கேட்க மற்றொரு குதிரையைத் தேரிலிருந்து அவிழ்த்துக் கொடுத்தான்.
அதன்பிறகு செல்லும் வழியில் மேலும் இரு அந்தணர்கள் வந்தனர். அவர்களிருவரும் தங்களுக்கும் குதிரை வேண்டுமென்று கேட்க, தேரில் பூட்டியிருந்த மீதி இரு குதிரைகளையும் விடுவித்து அவர்களிடம் கொடுத்தான்.
பின்னர் அந்தத் தேரைத் தானே இழுத்துச் சென்று கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்குப் பின்பு அந்த வழியில் வேறு சில அந்தணர்களும் வந்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருக்க, அவர்களும் தன்னிடம் குதிரை கேட்கப் போகிறார்கள் என்று நினைத்தபடி, “அந்தணர்கள் கேட்கக் கூடிய பொருள் இனி என்னிடம் ஒன்றுமில்லை” என்று முன்னதாகவே ஆத்திரத்துடன் கூறினான்.
இதனால், அவன் செய்த புண்ணியத்தில் சிறிது பாபமும் சேர்ந்து கொண்டது.
எப்போதும் ஆத்திரம் கொள்வதால் இருக்கின்ற புண்ணியத்தில் பாவமும் வந்து சேர்ந்து கொள்ளும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.