சூரிய வம்சத்தில் சகரன் எனும் அரசன் அசுவமேத யாகம் செய்ய நினைத்து ஒரு சிறந்த குதிரையை உலகைச் சுற்றி வர தகுந்த காவலுடன் அனுப்பினான்.
அந்தக் குதிரையை இந்திரன் பிடித்து பாதாள உலகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபிலரிஷியின் அருகிலிருந்த மரமொன்றில் கட்டி வைத்துவிட்டுச் சென்றான்.
சகரன் அந்தக் குதிரையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி தன்னுடைய அறுபதினாயிரம் பிள்ளைகளுக்கும் உத்தரவிட்டான். அவர்கள் பல இடங்களுக்குச் சுற்றித் திரிந்து, முடிவில் கபிலாசிரமம் வந்து சேர்ந்தனர். அங்கு குதிரை கட்டி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டனர்.
அந்தக் குதிரையைக் கபிலரிஷியே பிடித்துக் கட்டி வைத்திருப்பதாகக் கருதிய அவர்கள், கபில ரிஷியின் தவத்தைக் கலைக்கத் தொடங்கினர்.
அப்பொழுது திடுக்கிட்டு விழித்த கபில ரிஷியின் கோபக் கண்களில் பட்ட அனைவரும் எரிந்து சாம்பலாகினர்.
சகர வம்சத்தில் ஐந்தாம் தலைமுறையில் பகீரதன் என்பவன் இந்தச் செயலைக் கேள்விப்பட்டு, தன் முன்னோர்கள் நற்கதி அடையும் பொருட்டு நீண்ட காலமாகத் தவமிருந்தான். இந்நிலையில் ஆகாய கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து அவர்கள் சாம்பலின் மேல் பாயும்படி செய்தால் அவனது முன்னோர்கள் நற்கதியடைவார்கள் என்று பிரம்மன் வாயிலாக அறிந்தான்.
அதன் பிறகு, பரமசிவனையும், கங்கையையும் நோக்கித் வழிபட்டு வந்தான். நீண்டகாலம் நீடித்து வந்த இந்த வழிபாட்டால் அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. அவனுக்குத் தடைகள் பல ஏற்பட்டது.இருப்பினும், அவன் தான் கொண்ட விரதத்தையும், வழிபாட்டையும் விடாமல் செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு வியந்த தேவர்கள் அவனுக்கு உதவும்படி மும்மூர்த்திகளிடமும் வேண்டினர்.
மும்மூர்த்திகள் பகீரதனின் வேண்டுகோளை ஏற்றனர். கங்கை சுவர்க்க லோகத்திலிருந்து இறங்கி, சகர புத்திரர்களின் சாம்பலின் மேல் பாய்ந்து ஓடியது. பகீரதனின் வேண்டுதல் நிறைவேறியது.
பகீரதனின் தொடர் வேண்டுதல் எனும் அவன் விடாமுயற்சி இன்றும் “பகீரதப் பிரயத்தனம்” என்று போற்றப்பட்டு வருகிறது.