இடது கையால் கொடையளிக்கலாமா?
கர்ணனின் கொடையுள்ளத்தைச் சோதிக்க விரும்பினார் கண்ணன்.
கண்னன் கர்ணனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கு கர்ணன் ஒரு பொற்கிண்ணத்தில் இருந்த எண்ணெய்யை வலது கையில் ஊற்றித் தன் தலையில் தேய்த்துக் கொண்டிருந்தான்.
அங்கு வந்த கண்ணன், “கர்ணா, இந்தப் பொற்கிண்ணத்தை எனக்குக் கொடையாகக் கொடு” என்று கேட்டார்.
“இறைவனே! நீங்களா என்னிடம் கேட்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டான் கர்ணன்.
பின்னர், அவன் தயக்கம் எதுவுமின்றி அந்தப் பொற்கிண்ணத்தை இடது கையால் எடுத்துக் கண்ணனிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக் கொண்ட கண்ணன், “கர்ணா, உன்னை எல்லோரும் சிறந்த கொடையாளி என்று புகழ்கிறார்கள். உனக்கு இடது கையால் யாருக்கும் தானம் வழங்கக் கூடாது என்பது தெரியாதா?” என்று கேட்டார்.
“இறைவனே, நான் செய்த செயலுக்கு என்னை மன்னியுங்கள். என் வலது கை தற்போது எண்ணெய்க் கறையாக இருக்கிறது. நான் எழுந்து சென்று, கையைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டு உங்களுக்கு இந்தப் பொற்கிண்ணத்தை வழங்கியிருக்கலாம். ஆனால், அதற்கு சிறிது காலமாகும். உள்ளம் அலை பாயக்கூடியது. காலதாமதத்தால், விலையுயர்ந்த பொற்கிண்ணத்தை நான் எதற்காகத் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்கலாம். கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டவுடனே, கொடுத்து விடுவது என் இயல்பு. அதனால்தான், நான் எனது இடது கையால் கொடுக்க வேண்டியதாகி விட்டது” என்று விளக்கினான் கர்ணன்.
“கர்ணா, உன் கொடையுள்ளத்திற்கு யாரும் இணையாக மாட்டார்கள்” என்று அவனைப் புகழ்ந்து விட்டுச் சென்றார் கண்ணன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.