தந்தையும் மகனும் காட்டு வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். களைப்படைந்த அவர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்தார்கள்.
சிறுவனான மகன் கையில் பளபளக்கும் நாணயம் ஒன்றை வைத்திருந்தான். அதைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
"மகனே உன் கையில் உள்ள பணத்தைத் தொலைத்து விடாதே. இந்த உலகத்தில் மிகவும் உயர்ந்தது பணம்தான். பணத்தால் எதையும் செய்ய முடியும். ஒரு நாட்டை வெல்ல முடியும். பெரிய அரண்மனையைக் கூட கட்ட முடியும். வீரர்களை உன் கட்டளைக்குப் பணிய வைக்க முடியும்." என்றார் அவன் தந்தை.
அருகிலிருந்த புதரில் ஒளிந்திருந்த நரி ஒன்று இதைக் கேட்டது.
அந்த மரத்தினருகே வந்தது. பளபளக்கும் நாணயம் தரையில் கிடப்பதைப் பார்த்தது. நாணயத்தை வாயில் கவ்வியது.
உடனே அதற்கு அந்த காட்டிற்கே அரசனாகி விட்டது போல் ஒரு எண்ணம் வந்து விட்டது. அருகிலிருந்த மணல் மேடு ஒன்றில் ஏறி கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டது. மகிழ்ச்சியுடன் ஊளையிட்டது.
அந்த வழியே வந்த கீரி ஒன்று, "நரியாரே, என்ன மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டது.
"நான் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தக் காட்டிற்கு அரசனாக முடியும். இங்கு பெரிய அரண்மனை ஒன்றைக் கட்ட முடியும். நாட்டிலுள்ள மனிதர்கள் கூட எனக்குக் கீழ் படிந்து நடப்பார்கள். இங்குள்ள சிங்கம், புலி, யானை எல்லாம் எனக்கு எம்மாத்திரம்? அதனால் மகிழ்ச்சியாக உள்ளேன்." என்று பெருமை பேசியது.
இந்த நரிக்குப் பைத்தியம் ஏது பிடிக்கவில்லை. ஏதோ சிறந்த ஆற்றல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதனால்தான் இப்படி பேசுகிறது என்று நினைத்தது கீரி.
இந்தச் செய்தியை அது மான்களிடமும் ஓநாய்களிடமும் சொல்லியது. அப்படியே இந்தச் செய்தி முயல்களிடமும், கரடிகளிடமும் சென்று காடு முழுவதும் பரவி விட்டது.
அனைத்து விலங்குகளும் கூட்டம் கூட்டமாக வந்து நரிக்கு வணக்கம் செலுத்தியது.
தற்பெருமையோடிருந்த நரியோ எதற்கும் பதில் வணக்கம் செலுத்தாமல் அவைகளைக் கண்டும் காணாததைப் போல் இருந்தது.
இதனால் எரிச்சலடைந்த கரடி ஒன்று, "நரியே, உன்னை நோக்கி யானை ஒன்று கோபமாக வருகிறது. உன் ஆற்றலைப் பயன்படுத்தி அதை வணக்கம் செய்ய வை. பார்ப்போம்." என்றது.
இதைக் கேட்ட நரி பலமாகச் சிரித்தது.
"என்னைப் பார்த்து வணக்கம் செலுத்தாத அந்த யானை என்னிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்கப் போகிறது. என் ஆற்றலை இப்போது பார்க்கப் போகிறீர்கள்." என்று வீரம் பேசியது.
யானை அதை நெருங்கியது.
மற்ற விலங்குகள் "அங்கு என்ன நடக்கப் போகிறது?" என்று அறிய ஆவலுடன் ஒதுங்கிப் பார்த்தன.
எழுந்து நின்ற நரி அந்த நாணயத்தை யானையின் முன் காட்டியது.
"யானையே, என்னிடம் உள்ளதை நன்றாகப் பார். பளபளக்கும் இதற்கு பணம் என்று பெயர். இதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் கட்டளையிடுகிறேன். அங்கேயே நில்" என்று அதிகாரத் தோரணையுடன் சொன்னது.
ஆனால் யானை அதைக் காதில் வாங்கவேயில்லை. தன் துதிக்கையால் அந்த நரியைப் பிடித்துத் தூக்கி வீசி எறிந்தது.
புதர் அருகே சென்று விழுந்த நரி மயக்கமாகிக் கிடந்தது.
அங்கு வந்த குரங்கு ஒன்று அந்த நாணயத்தைப் பார்த்தது.
"விலங்குகளே, இதற்குப் பணம் என்று பெயர். முட்டாள் மனிதர்கள்தான் இதற்கு மதிப்பு தருவார்கள். இதை வைத்து எதையும் செய்து விடலாம் என்று அந்த முட்டாள் மனிதர்கள்தான் நினைக்கிறார்கள்"
"முட்டாள் மனிதன் ஒருவனின் பேச்சை அப்படியே நம்பி விட்டது இந்த நரி. இதற்கு நல்ல பாடமும் கிடைத்தது." என்றது.
நரியின் முட்டாள்தனத்தை நினைத்துச் சிரித்தபடியே அனைத்து விலங்குகளும் அங்கிருந்து கலைந்து சென்றன.