இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளலாமா?
இளைஞன் ஒருவன் மருத்துவரிடம் சென்றான். தான் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகக் கூறி கண்ணீர் வடித்தான்.
“மருத்துவர் அவனிடம் உன் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள்?” என்று வினவினார்.
“நல்ல குணமுடைய நண்பர்கள்தான். நான் கேட்பதற்கு முன்பே ஓடி வந்து உதவி செய்யக் கூடியவர்கள்”
“பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள்?”
“நான் சோர்ந்து விழும் போது தாங்கி நிறுத்தக்கூடிய வல்லமை படைத்தவர்கள்”
“குடும்பம் எப்படிப்பட்டது?”
“ஊக்கம் கொடுக்கக்கூடிய மனைவி, அருமையான குழந்தைகள் எனக்கு உண்டு”
“நீ எப்படிப்பட்டவன்?”
“நான் நல்லவன் என்ற நம்பிக்கை என் மீது எனக்கு உண்டு”
“இப்போது சொல், நீ எதை இழந்தாய்?”
“சேர்த்து வைத்திருந்த பணத்தை”
உடனே மருத்துவர், “நீ இழந்து போனது ஒன்றே ஒன்றுதான். ஆனால் உன்னிடம் இருப்பதோ ஏராளம்!”
“இருப்பதைக் கொண்டு எழுந்திருக்க முயற்சி செய். இழந்து போனதைப் பற்றிக் கவலைப்படாதே!” என்று கூறினார்.
ஆம், நாம் தடுமாறி விழும்போது மீண்டும் மீண்டும் உயரமாக எழுந்து நிற்க முயற்சி செய்ய வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.