ஒன்றுக்கும் உதவாத விசயத்தில் விடாப்பிடியாக இருக்கலாமா?
காடுகளில் உள்ள மரங்களையும், செடி கொடிகளையெல்லாம் மனிதர்கள் தங்களுடைய பேராசையினால் அழித்து விட்டதால் இன்று காட்டிலுள்ள விலங்குகள் தங்களின் உணவைத் தேடி மனிதர்களின் இருப்பிடப் பகுதிக்குள் வரத் தொடங்கி விட்டன.
இப்படித்தான் குரங்குகள் சில தங்களுடைய பசியைப் போக்க அந்தக் குடியிருப்புக்குள் வந்து விட்டன.
அந்தக் குரங்குகளில் ஒன்று பசிக்காக வீடுகளின் கூரை மீது தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பணக்காரன் வீட்டின் வாசலில் தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த அழகான ஆப்பிள் பழங்களைப் பார்த்தது.
உடனே அந்தக் குரங்கு, தனக்கு ஆப்பிள்கள் உணவாகக் கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தது. அந்த மகிழ்ச்சியில் சில ஆப்பிள்களை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் முன்பகுதிக்கு வந்தது.
அந்தக் குரங்கு அந்த ஆப்பிளைக் கடித்துத் தின்ன முயன்ற போது, அதால் அந்த ஆப்பிளைத் தின்ன முடியவில்லை. அதற்குப் பல் வலித்ததே தவிர, அதனால் அந்தப் பழத்தைத் தின்ன முடியவில்லை.
அந்தக் குரங்குடன் வந்த கூட்டத்தில் இருந்த வயதான குரங்கொன்று, “அந்த ஆப்பிள் மரத்தினால் செய்த பொம்மை ஆப்பிள். அதை நீ தின்ன முடியாது, அதனைக் கீழே போட்டுவிட்டு, அதோ அருகில் உள்ள கொய்யா மரத்தில் ஏறிக் கொய்யாப்பழம் அல்லது காய்களைப் பறித்துத் தின்று பசியாறு” என்றது.
தான் இந்த ஆப்பிளைக் கீழே வைத்துவிட்டு கொய்யாமரத்திற்குச் சென்றால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம் என அந்த வயதான குரங்கு திட்டமிடுவதாக எண்ணிக் கொண்டு கொய்யாப் பழம் எனக்குத் தேவையில்லை என்றபடி மீண்டும் அந்த மர ஆப்பிளைக் கடிக்கத் தொடங்கியது.
அந்தக் குரங்கு மாலை வரை முயன்றும் அந்த ஆப்பிளைக் கடித்துத் தின்ன முடியவில்லை கைகளில் தொடர்ந்து அதனை வைத்துக் கொண்டே இருப்பதால் கைகளில் வலி ஏற்பட்டதே தவிர அந்தக் குரங்கினுடைய பசியாறவில்லை.
எனவே, வயதான குரங்கு கூறிய அறிவுரையின்படி, அந்தக் குரங்கு அருகிலிருந்த கொய்யாமரத்தில் ஏறி சில பழங்களையும், காய்களையும் பறித்துத் தின்றது. அதன் பசி அடங்கியது.
அதன் பிறகுதான், இதனை முன்பே செய்து நம் பசியாற்றியிருக்கலாமே என வெட்கபட்டது.
வரட்டுக் கவுரவத்திற்காகவும், போலியான வாழ்க்கைக்காகவும் ஒரு சிலர் இந்தக் குரங்கைப் போல் ஏதாவதொரு விசயத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அவதிப்படுகின்றனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.