உழவன் ஒருவன், அவனுடைய தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டிருந்தான். அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து ஒரு முயல் தினமும் அங்கு விளைந்திருந்த பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். ஆனால், அந்த முயல் மட்டும் அவனிடம் சிக்கவே இல்லை.
எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். "அரசே என் காய்கறித் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த முயலைப் பிடிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றான்.
இதைக் கேட்டு சிரித்த அரசன், “ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா?" என்று கேட்டான்.
"அரசே! அந்த முயலைப் பிடிக்க நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போய்விட்டது" என்றான் அவன்.
"அப்படியா? நான் நாளை என்னுடைய வேட்டை நாய்களுடன் உன் தோட்டத்துக்கு வருகிறேன். அந்த முயலைப் பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்" என்றான் அரசன்.
உழவனுக்கு மகிழ்ச்சி. அரசனே தன் தோட்டத்திற்கு வந்து முயலைப் பிடித்துத் தருவதாகச் சொல்கிறாரே... இனி நமக்கு முயலின் தொல்லை இருக்காது என்று நினைத்து, அரசனுக்கும் அவன் வீரர்களுக்கும் சிறப்பான விருந்திற்கு ஏற்பாடு செய்தான்.
மறுநாள் அரசன் அவானுடைய படை வீரர்கள், வேட்டைக்காரர்கள், நாய்கள் சகிதமாக அங்கு வந்தான்.
உழவன் அவர்களை வரவேற்று, அவர்களுக்குச் சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் "இன்னும் சிறிது நேரத்தில் அந்த முயலைப் பிடிக்கிறோம்" என்று வேட்டையாடப் புறப்பட்டான்.
வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள். வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்த முயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்த வேலியை நோக்கி ஓடியது.
அதைப் பார்த்த அரசன், "அந்த முயலைத் தப்ப விடாதீர்கள், பிடியுங்கள்" என்று கத்தியபடி வேலிப் பக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும் வீரர்களும் அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.
தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத் துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக் கவ்விப் பிடித்தது.
வெற்றிப் பெருமிதத்துடன் அந்த முயலை உழவனிடம் காட்டினான் அரசன். இவர்களின் முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம் முழுவதுமாக நாசமாகிப் போய் விட்டதை அறிந்து வருந்தினான் உழவன்.
"சிறு வேலைக்குப் பெரியவர்கள் உதவியைக் கேட்பது தவறு என்பதை உணராமல் போனேனே. என் அழகான தோட்டம் அழிந்து போய்விட்டதே. ஒரு முயல் என்ன ஆயிரம் முயல்கள் பல நாட்கள் வந்திருந்தாலும் கூட இப்படித் தோட்டம் முழுவதும் அழிந்திருக்காது. என் முட்டாள்தனத்தால் என் தோட்டத்துக்குப் பேரழிவைத் தேடிக் கொண்டேனே..." என்று வந்திருந்தான் அவன்.