ஒரு வணிகன் குதிரைமேல் போனான்.அவன் பாதுகாப்புக்கு ஒரு வேலைக்காரன் அந்தக் குதிரையின் பின்னால் சென்றான்.
அப்படிச் செல்லும் போது குதிரை மீது இருந்து ஒரு மூட்டை கீழே விழுந்து விட்டது. மூட்டை கீழே விழுந்தத்தை அந்த வணிகன் கவனிக்கவில்லை.
ஆனால், அந்த வேலைக்காரன் பார்த்தான். அவன் கீழே விழுந்த மூட்டையை எடுக்காமல் வந்து விட்டான்.
சிறிது தூரம் சென்ற பின்பு அந்த வணிகனுக்கு மூட்டை கீழே விழுந்து விட்டது தெரிந்தது. வணிகன் அவனிடம், “ஏய் குதிரை மேலிருந்த மூட்டை ஒன்று விழுந்ததை நீ பார்த்தாயா?” என்று கேட்டான்.
“ஆமாம் ஐயா ஒரு மூட்டை கீழே விழுந்ததை நான் பார்த்தேன்” என்றான் அவன்.
“அப்படியானால் அதை ஏன் எடுத்து வரவில்லை?” என்று கேட்டான் வணிகன்.
அவன், “நீங்கள் என்னிடம் கீழே விழுவதை எடுத்து வரும்படி சொல்லவில்லையே” என்று சொன்னான்.
உடனே வணிகன், “அடே மடையா, இனி எது கிழே விழுந்தாலும் எடுத்து வா” என்றான்.
அந்த வேலைக்காரனும் அதற்குச் சரி என்றான்.
குதிரை போய்க் கொண்டிருந்தது. அப்போது குதிரை சாணம் போட்டது. உடனே வேலையாள் அவைகளையெல்லாம் வேட்டியில் மூட்டை கட்டிக் கொண்டான்.
வணிகன் தான் சேருமிடம் வந்த பின்பு குதிரையை ஒரு ஓரமாகக் கொண்டு போய்க் கட்டினான்.
அப்போது அந்த வேலைக்காரன், “ஐயா, குதிரை வரும் வழியில் சாணம் போட்டது. நீங்கள் சொன்னபடி கீழே விழுந்த இதை எடுத்து என்னுடைய துண்டில் கட்டிக் கொண்டு வந்து இருக்கின்றேன்” என்றான்.
அதைப் பார்த்த வணிகன், “நீ சரியான மடையனாக இருக்கிறாய், குதிரை போட்ட சாணத்தை எடுத்துத் துண்டில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாயே... உன்னைத் திருத்த முடியாது” என்றான்.
வேலைக்காரன், “இந்த வணிகர்களே இப்படித்தான்... முதலில் கீழே விழுந்ததை எடு என்பார்கள்... நாம் எடுத்து வந்தால், இதையெல்லாம் ஏன் எடுத்து வந்தாய்? என்று திட்டுவார்கள். இவர்களெல்லாம் என்று திருந்தப் போகிறார்களோ?” என்று நினைத்துக் கொண்டான்.