மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பி வந்தபோது திடுக்கிட்டு அலறியது.
ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.
தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா! என்று அலறியது.
பாம்பு அதைச் சட்டை செய்யவில்லை.
பாம்பண்ணா! பாம்பண்ணா! ஒரு நிமிஷம் நான் சொல்வதைக் கேளுங்கள்! மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது.
திரும்பிப் பார்த்த பாம்பு, “ஏன் எதற்காகக் கத்துகிறாய்?” என்றது.
“அண்ணா! நீங்க எவ்வளவு பெரியவங்க! உங்களைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் எங்கள் மேல் நீங்க இரக்கப்படக் கூடாதா?”
“அப்படியா?”
“அண்ணா என் குழந்தைகளை விட்டுவிடுங்க! நாங்கள் பிழைத்துக் கொள்கிறோம்”
“நான் கேட்பதற்குச் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் நான் உன் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறேன்”
“கேளுங்க அண்ணா”
“உன் வாயில் தற்போது என்ன வைத்திருக்கிறாய்?”
“என் குஞ்சுகளுக்குச் சிறிது இரை கொண்டு வந்திருக்கிறேன் அண்ணா”
“என்ன இரை அது?”
“சின்னப் புழுக்கள் அண்ணா!”
“உன் குழந்தைகளின் இரைக்காகச் சென்ற நீ அந்தப் புழுக்களுக்கு இரக்கம் காட்டவில்லை... ஆனால், என்னிடம் மட்டும் இரக்கம் காட்டச் சொல்கிறாயே...”
பாம்பு கேட்ட அந்தக் கேள்விக்கு அந்தப் பறவையால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.
“இதுதான் நமது வாழ்க்கை விதி! உன்னைவிட பலம் குறைந்தது உனக்கு இரையாகிறது. என்னைவிட பலம் குறைந்தது எனக்கு இரையாகிறது. இப்படி இல்லாமல் தானே உற்பத்தி செய்து வாழ வழி இருக்கிறவர்கள் மனிதர்கள்தான். ஆனால், அவர்களே அப்படி வாழ்வதில்லை. பல உயிரினங்களைக் கொன்று உண்டு வாழ்ந்து வருகிறார்கள்... இப்படிப்பட்ட சூழலில் என்னை இரக்கம் காட்டச் சொல்வது சரிதானா? நீயே யோசித்துக் கொள். இன்று நீ என்னை அண்ணா என்று அன்போடு பலமுறை அழைத்தாய், அந்த மகிழ்ச்சியில் இன்று உன் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தையும் நான் செய்யப் போவதில்லை. என் பசிக்கு நான் வேறு வழியைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றபடி அந்தப் பாம்பு போய்விட்டது.
பாம்பு சென்ற அந்தத் திசையைப் பார்த்துத் திகைத்து நின்றது தாய்ப்பறவை!