அரசரின் மதிநுட்பம்
அந்த ஊரில் அரசராகப் பதவியேற்பவர் ஐந்து வருடம் தான் ஆட்சி செய்ய முடியும். அதன் பிறகு அவர் காட்டுக்கு அனுப்பப்படுவார். அங்கு அவர் மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.
அதனால் யாரும் ஐந்து வருடம் முழுமையாக ஆட்சி செய்ய முடியவில்லை. ஒரு வருடம் அல்லது இரண்டு, மூன்று வருடத்துல காட்டுக்குப் போக வேண்டுமென்பதை நினைத்தே அவர்களின் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். பதவிக் காலம் முடியாமலே இறந்து போய்விடுவார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் ஒருவர் மட்டும் ஐந்து வருடம் மகிழ்ச்சியாக ஆட்சி செய்தார். அவருக்கு ஐந்து வருடம் பதவிக் காலம் முடிந்தது. தற்போது அவர் காட்டுக்குச் செல்ல வேண்டும். அரசரை அனைவரும் வழியனுப்ப வந்திருந்தனர்.
அப்போது அந்த அரசர், “என்னை அந்த காட்டில் கொண்டு வந்து விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்.
காட்டுக்குப் போகும் வழியில் ஒருவர் அரசரைப் பார்த்துக் காட்டிற்குப் போகும் நீங்கள் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று கேட்டார்.
அதற்கு அரசர், “நான் ஆட்சி செய்த காலத்தில் முதல் வருடம் என் படையை அனுப்பி அந்தக் காட்டில் இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருடம் அந்த காட்டில் நான் வசிப்பதற்கு ஒரு அரண்மனையைக் கட்டி விட்டேன். தற்போது அங்கு மக்கள் வசிக்கக் கூடியதாக ஒரு பகுதியையும் உருவாக்கி விட்டேன். இனி அங்கு நான்தான் அரசர். என்னுடன் அங்கு வருபவர்களெல்லாம் மக்கள்” என்றார்.
அரசரின் மதிநுட்பத்தை வியந்து பார்த்தனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.