ஒரு ஊரில் இரண்டு பெரிய மனிதர்கள் இருந்தார்கள். இருவருமே பிறருக்கு உதவி செய்வதில் கர்ணனைப் போல் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள். ஒருவர் நீலகண்டன். இன்னொருவர் மணிகண்டன்.
ஒருநாள் நீலகண்டன் தன் வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு பெரியவர், “நீலகண்டனிடம் அய்யா நமது ஊருக்கு மகான் ஒருவர் வந்திருக்கிறார். அவர் இமயமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்துத் தன் சீடர்களுக்கு உலக அறிவைச் சொல்லிக் கொடுப்பவராம். இப்பொழுது ஒரு யாத்திரை காரணமாய் நம் ஊரில் சில நாட்கள் தங்கி இருக்கிறார். அவரிடம் சென்று நம் ஊர் மக்கள் எல்லோரும் ஆசி பெற்று வருகிறார்கள். நீங்களும் சென்று ஆசி பெற்று வாருங்கள்” என்றார்.
நீலகண்டனும் சரி என்றார்.
மகான் மெய் பற்றிய விவரம் மணிகண்டனுக்குத் தெரியவர அவரும் மகானைக் காண ஆவல் கொண்டார்.
நீலகண்டன் மகானிடம் சென்று ஆசி வாங்கி கொண்டார். பின் விடைபெறும்போது குருவே நான் எல்லா வசதிகளையும் அனுபவித்து விட்டேன். யாருக்கும் தீங்கு இளைத்தது இல்லை. இயலாதோர்க்கு உதவி செய்வதைக் கடமையாக நினைப்பவன். எனக்கு சொர்க்கம் கிடைக்குமா? என்று கேட்டார்.
நாளை மறுநாள் காலை இந்த ஊரின் வடக்கு எல்லையில் உள்ள ஆலமரத்திற்குப் போ. அங்கே ஒரு பெரியவர் வருவார். அவர் மகா துறவி. அவருக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொடு. உடனே வானிலிருந்து ஒரு பல்லக்கு வரும், அது உன்னைச் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் என்றார்.
மகானிடம் விடை பெற்றார் நீலகண்டன்.
அடுத்த நாள் மணிகண்டனும் மகானைச் சென்று சந்தித்தார். அவருக்கும் சொர்க்கம் செல்வதற்கான வழியை சொன்னார் மகான்.
அடுத்த நாள் காலை உணவை எடுத்துக் கொண்டு நீலகண்டன் ஆலமரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மகா துறவி கண்மூடி அமர்ந்திருந்ததை பார்த்த ஆவலில் மகிழ்ச்சியுடன் சென்றார் நீலகண்டன்.
அப்பொழுது மணிகண்டனும் உணவை எடுத்து வந்து கொண்டிருந்தார். அதை பார்த்த நீலகண்டன், சரி இருவரும் கொடுப்போம். யாரிடம் துறவி உணவை வாங்குகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கட்டும் என்று மனதிற்குள் நினைத்து விட்டு தொடர்ந்து நடந்தனர்.
ஆனால் மணிகண்டன் என்ன நினைத்தாரோ தொடர்ந்து நடக்காமல் அப்படியே நின்று விட்டார்.
நீலகண்டன் உணவை அந்த மகா துறவி சாப்பிட்டார். வானிலிருந்து ஒரு பல்லக்கு வந்து மணிகண்டனைச் சொர்க்கத்துக்கு அழைத்து சென்றது.
நீலகண்டனுக்கு வருத்தம் இல்லை என்றாலும் குழப்பம் ஏற்பட்டது. உணவு நான் கொடுக்க பெரியசாமிக்கு எப்படி சொர்க்கம் கிடைத்தது?
மீண்டும் சென்று மகானைச் சந்தித்து விடை கேட்டார்.
மகான் சொன்னார், “நீ அந்தத் துறவிக்கு உதவி செய்தாய். ஆனால் மணிகண்டன் நீ துறவிக்கு உதவி செய்ய உனக்கு விட்டுக் கொடுத்தார். நீ துறவிக்கு உதவி செய்ய உனக்கு உதவினார் மணிகண்டன். அதனால் அவருக்கு முதலில் சொர்க்கம் கிடைத்தது” என்றார்.
உனக்கும் ஒருநாள் சொர்க்கம் கிடைக்கும் என்று வாழ்த்தி அனுப்பினார் அந்த மகான்.