முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?
ஒரு பாலைவனத்தில் இருவர் ஒட்டகத்தில் போய்க் கொண்டிருந்தனர்.
சிறிது களைப்பு வரவும் இருவரும் ஓர் ஓரமாக சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டனர்.
திடீரென்று ஒட்டக ஓட்டியை மற்றவர் படாதபாடு படுத்துகிறார். அவரை உருட்டிப் பிரட்டிக் காலை இழுத்து, தலையை அசைத்து, இப்படிச் செய்யும் போது ஒட்டக ஓட்டிக்குக் கோபம் வந்தது.
ஏன் என்னை நீ இந்தப்பாடு படுத்துகிறாய்? என்று கேட்டார் ஒட்டக ஓட்டி.
அதற்கு அவர், “நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு” என்று சொல்லிவிட்டு, அவர் வேலையையே பார்த்தார்.
சிறிது நேரத்தில் ஒட்டக ஓட்டியின் வாயிலிருந்து சிறிய பாம்பு ஒன்று வெளியில் வந்து விழுந்தது.
இதைப் பார்த்ததும் ஒட்டக ஓட்டி பயந்து போனார்.
அப்போது ஒட்டக ஓட்டியுடன் வந்தவர், “நீ சற்று நேரம் வாயைத் திறந்து கொண்டே தூங்கிவிட்டாய் உன் வாயில் இந்தக் குட்டிப்பாம்பு சென்றுவிட்டது அதை எடுத்துவிடவே உன்னை இந்தப்பாடு படுத்தினேன்” என்று சொன்னார்.
“பாம்பு என் வாயிலிருந்து வந்தபின் சொல்கிறீரே... ஏன் இதை முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?” என்றார் ஒட்டக ஓட்டி.
அதற்கு அவர், “நான் முன்பே உன் வாய்க்குள் பாம்பு சென்றுவிட்டது என்று சொல்லியிருந்தால்... நீ அந்தப் பயத்திலேயே செத்துப் போயிருப்பாய்” என்று கூறினார்.
பாம்பு கடித்து இறப்பவர்களை விட பாம்பு கடித்து விட்டது என்று பயத்தில் இறப்பவர்களே அதிகம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.