சாமியார் உண்மையானவரா?
ஒரு ஊரில குறும்புக்கார இளைஞர்கள் இரண்டு பேர் இருந்தனர்.
அந்த ஊரில் ஒரு சாமியார் ஒருவர் மக்களுக்கு அருள்வாக்கு சொல்வதையும், மக்களின் விருப்ப காலத்தைப்பற்றி சொல்வதுமாக இருந்தார்.
இதைக் கண்ட அந்த குறும்புக்கார இளைஞர்கள் அந்த சாமியார் உண்மையானவரா? பொய்யானவரா? எனக் கண்டறிய விரும்பினர்.
அவர்கள், ஒரு கிளியைப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு, அது உயிரோடு உள்ளதா? இல்லையா? என்று கேட்பதென்றும், சாமியார் உயிரோடு இருக்கிறது என்றால் கிளியை கையால் கழுத்தை நெறித்து விட்டு இதோ கிளி உயிரோடு இல்லை என்று காட்டலாம். “சாமியார், கிளி உயிரோடு இல்லை” என்றால் பின்னால் கைகளில் மறைத்து வைத்திருக்கும் கிளியை அப்படியே உயிரோடு காட்டி விடலாம்” என்று திட்டமிட்டு சாமியாரிடம் சென்றார்கள்.
அவர்கள் சாமியாரிடம், ஒரு கிளியை இலேசாகக் காண்பித்து விட்டு, பின்புறமாக மறைத்துக் கொண்டவாறு, “இந்தக் கிளி உயிரோடு இருக்கிறதா, இல்லையா?” என்று கேட்டனர்.
சாமியார் சற்று நிதானமாக யோசித்துவிட்டு, “அந்தக் கிளி உயிரோடு இருப்பதும், உயிரோடு இல்லாமலிருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது” என்றார்.
அந்த இளைஞர்கள் சாமியாரின் புத்திசாலித்தனமான பதிலை வணங்கிவிட்டுச் சென்றார்கள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.