பல நாடுகளைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த ஒரு பேரரசர். அவருக்கு ஆலோசனைகள் கூற பல மந்திரிகள் இருந்தனர். அரசருக்குப் பணிவிடை செய்ய சேவகன் ஒருவன் இருந்தான். அரசர் அந்தச் சேவகனிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அரசர் சேவகனிடம் கொண்ட அன்பைச் சகிக்காத மந்திரிகள் அவன் மேல் பொறாமை கொண்டார்கள். அறிவுக்கரிய பல ஆலோசனைகள் கூறும் நம்மிடம் காட்டாத அன்பை, ஒரு சேவகனிடம் போய் அரசர் அன்பைக் காட்டுகிறாரே என்ற எரிச்சலும் அவர்களுக்குள் இருந்தது.
மந்திரிகள் இவ்வாறு பொறாமைப்படுவது அரசருக்குத் தெரிய வந்தது.
மந்திரிகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டுமென்று அரசர் திட்டமிட்டார்.
அரசவையைக் கூட்டினார். அவைக்கு மந்திரிகள் அனைவரும் வந்திருந்தனர்.
அரசரின் சிம்மாசனத்துக்கு முன்பாக மிகவும் விலை உயர்ந்த ஒர் இரத்தினக் கல்லும், ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டிருந்தது.
அரசர் தமது முதல் மந்திரியை அழைத்தார்.
அரசர் அவரிடம், “அந்த சுத்தியலை எடுத்து பெரும் மதிப்புள்ள இரத்தினக்கல்லை உடையுங்கள்” என்றார்.
முதல் மந்திரி, விலை மதிப்பற்ற இரத்தினக்கல்லை உடைத்தால் அது பயனில்லாமல் போய்விடுமே? என்று யோசித்தபடி அப்படியே நின்று விட்டார்.
அரசர் அவரை அவரது இருக்கைக்குச் செல்லும்படி சொன்னார். முதல் மந்திரியும் அவர் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
அரசர் அடுத்த மந்திரியை அழைத்து இரத்தினக்கல்லை உடைக்கக் கட்டளையிட்டார். முதல் மந்திரியே இரத்தினக் கல்லை உடைக்காத போது அவர் உடைப்பாரா? அவரும் உடைக்காமல் திரும்பி விட்டார்.
இப்படியே, அரசவையிலிருந்த மந்திரிகள் எவரும் அந்த இரத்தினக்கல்லை உடைக்கத் துணியவில்லை.
எல்லோருடைய சிந்தனையிலும் அந்த இரத்தினக்கல்லின் மதிப்பே முதன்மையாகத் தெரிந்தது.
இறுதியாக அரசர் தனது சேவகனை அழைத்து, இரத்தினக்கல்லை உடைக்கும்படி கட்டளையிட்டார்.
அரசரின் வாயிலிருந்து கட்டளை பிறந்தவுடன், அவன் எவ்விதத் தயக்கமுமின்றி சுத்தியலை எடுத்து இரத்தினக்கல்லை உடைத்தான்.
இதைப் பார்த்த மந்திரிகள் அனைவரும், “அட முட்டாளே! விலைமதிப்புள்ள இரத்தினக்கல்லை இப்படி உடைத்து வீணாக்கி விட்டாயே?” என்று சத்தம் போட்டனர்.
அந்த சேவகன் எவ்விதப் பதட்டமுமில்லாமல், ”மந்திரிகளே, தாங்கள் விலைமதிப்புள்ள இரத்தினக்கல்லை உடைத்ததைப் பார்த்து, அது வீணாகிப் போய்விட்டதே என்று கவலைப்படுகிறீர்கள்... நான் அப்படியில்லை, இந்த இரத்தினக்கல்லை விட நம் அரசரின் சொல்லையே மதிப்புள்ளதாக நினைக்கிறேன். அவர் எதைச் சொன்னாலும், அதைச் செய்வதே என்னுடைய பணி” என்றான்.
மந்திரிகளுக்குப் புரிந்தது. தங்களுக்கு...?