ஒரு காட்டில் காட்டாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.
அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடிக் காற்றை வரவழைக்கும்.
ஒரு நாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக் கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது... இந்தக் காற்று... இப்படி அடிக்குது” என்று புலம்பிக் கொண்டிருந்தது.
அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.
தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்ன இது அநியாயம்... மரத்துல இருந்த என்னைக் காற்று இப்படி ஒடித்துப் போட்டு விட்டதே... அதுவும் இப்படி ஆற்றில் விழுந்து செல்லும்படி ஆகிவிட்டதே...” என்று அழுது புலம்பியது.
அண்ணன் கிளை, “ஆற்றுத் தண்ணீர் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறதே...” என்றது.
இதைக் கேட்ட தம்பி கிளைக்குக் கோபம் வந்தது. “ச்சீ... நீயெல்லாம் மரக்கிளையா? அடுத்து நாம் பிழைக்க வழி இல்லாமலிருக்கும் பொழுது, ஆற்று நீர் குளிர்ச்சியாக இருக்குது என்று சொல்வதா?” என்று அதைச் சத்தம் போட்டது.
அண்ணன் கிளையோ, “தம்பி, இதை மனிதர்கள் பணம் செலவழித்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைத்திருக்கிறது. ஆற்று நீரில் செல்வது அபார சுகமாக இருக்கிறது” என்றது.
தம்பிக்கிளைக்கு மேலும் கோபமாக வந்தது. ‘இனியும் இவனுடன் பேசக்கூடாது’ என்று முடிவு செய்தது. இறைவன் முதல் அனைவரையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு அழகாக மரத்தில் இருந்த தன்னை இப்படி ஆற்றில் அடித்துச் செல்வதுடன் ஆற்றிலுள்ள பாறையிலும், கரையிலும் முட்டி மோதிக் காயம்படும்படியும் ஆகிவிட்டதே என்று புலம்பியபடி ஆற்றில் போய்க் கொண்டிருந்தது.
அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க் கொண்டிருந்தது.
கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பிக் கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை இன்றோடு முடிந்தது. இந்த நல்லதண்ணீரின் அருகில் எங்காவது கரை ஒதுங்கியிருந்தால் கூட வேர் பிடித்து மரமாக வளர வாய்ப்பிருக்கும். அங்கே கடலுக்குள்ள போனால் நம் மரணம் உறுதிதான்” என்றது.
“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.
“தெரியுமா? அது தெரிந்துமா மகிழ்ச்சியுடன் வருகிறாய்?”
“ஆமாம், எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியும் நம் வாழ்க்கை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிந்துவிட்டது. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். அப்போது நமக்கிருந்தது இரண்டே வழிகள்தான். ஒன்று அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அந்த கஷ்டத்தை இருக்கும் வரை இனிமையாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது. மற்றொன்று, அதை எதிர்த்துக் கொண்டு மன அழுத்தத்துடன் மரணிப்பது. நான் முதல் வாய்ப்பை எடுத்தேன். நீ இரண்டாம் வாய்ப்பை எடுத்தாய். நம் இரண்டு பேருக்கும் முடிவு ஒன்றுதான். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக மரணம் நோக்கி வந்தேன். நீ அழுது கொண்டே வந்தாய். இந்தப் பூமியில் தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது” என்றது அந்த அண்ணன் கிளை.
தம்பி கிளை, “நீ சொல்றது சரி தான் அண்ணே... நான் கிடைத்த காலத்தை வீணாக்கி விட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கடல் வந்துவிட்டது. இரு கிளைகளும் கடலில் சங்கமித்தன.