செங்கிஸ்கான் தலை வணங்கியது ஏன்?
கொடுங்கோலனான செங்கிஸ்கான் சீனா மீது படையெடுத்துச் சென்றான்.
அப்போது அவனது குதிரைப் படையினர் துரத்த, குழந்தைகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்த பெண்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.
அங்கு இடையில் ஒரு குழந்தையைத் தூக்கி மூத்தக் குழந்தையை ஓடவிட்டு ஒரு தாய் ஓடிக் கொண்டிருந்தாள். ஓடிய குழந்தை காலிடறிக் கீழே விழுந்தது. அவளோ இடையில் இருந்த குழந்தையைக் கைவிட்டுப் பெரிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினாள்.
இதைப் பார்த்த அவளை இழுத்து வரச் சொன்னான் செங்கிஸ்கான்.
"நீ விட்டுவிட்டு ஓடியது உன் பக்கத்துவீட்டுப் பெண்ணின் குழந்தைதானே? உண்மையைச் சொல் " என்றான் கத்தி முனையில்.
"இல்லை அரசே... நான் விட்டுவிட்டுச் சென்றதுதான் என் குழந்தை, இது இறந்து போன பக்கத்து வீட்டுக்காரியின் குழந்தை. அவளிடம் நான் அவளது குழந்தையைக் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தேன். எனவே என் வாக்குறுதியைக் காப்பாற்ற என் குழந்தையை விட்டுவிட்டு அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினேன்" என்றாள் அப்பெண்.
செங்கிஸ்கான் அவள் சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் தொடர்ந்து, "என் குழந்தை கடவுள் அளித்தது. இந்தக் குழந்தையை அளித்தது தர்மம். கடவுளை விடப் பெரியது தர்மம்." என்று சொன்னாள்.
"தாயே... உன்னைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்த மண்ணை நான் ஒருபோதும் வெல்ல முடியாது” என்று அவள் முன் செங்கிஸ்கான் தலை வணங்கினான்.
- சீன நாட்டுக்கதை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.