புத்த மடாலயத்தில் இருந்த சிறுவன் ஒருவன் தலைமைத் துறவியிடம் சென்று, ”நான் போய் மலைக் கிழங்குகளைப் பறித்துக் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டான்.
‘போகாதே! நீ சென்றால், மலையில் இருக்கும் சூனியக்கிழவிகள் உன்னைப் பிடித்துக் கொள்வார்கள்’ என்றார் துறவி.
சிறுவனோ போகவேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.
‘சரி, போய் வா! இந்த மூன்று துண்டுக் காகிதங்களை உன்னோடு எடுத்துச் செல். அவை அதிர்ஷ்டத்தைத் தரும் காகிதங்கள். உனக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால், அவற்றை உதவும்படி கேள்!’ என்று, மூன்று காகிதத் துண்டுகளைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார் தலைமைத் துறவி. சிறுவன் உற்சாக மிகுதியில் மலைகளில் சுற்றினான். வெகு தூரம் போனான். நிறைய மலைக் கிழங்குகளைப் பறித்துக் கூடையில் போட்டுக் கொண்டான்.
அப்போது, ‘சிறுவனே, நீ மடாலயத்திலிருந்து வந்திருக்கிறாயா?’ என்று ஒரு குரல் கேட்டது.
சிறுவன் திரும்பிப் பார்த்த போது, அங்கே ஒரு கிழவி நின்றிருந்தாள்.
‘என்னிடம் இதை விடச் செழிப்பான கிழங்குகள் இருக்கின்றன. என்னுடன் வந்தால் நான் அவற்றை உனக்குத் தருகிறேன்’ என்று அவனுக்கு ஆசை வார்த்தை காட்டிப் பேசினாள்.
அவளது ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுவன் அவளுடன் சென்றான். அங்கு அவள் அந்தச் சிறுவனுக்குச் சில கிழங்குகளைத் தந்தாள். அவள் கிழங்குகள் மிகவும் ருசியாக இருந்தன.
‘சரி, நள்ளிரவு ஆகிவிட்டது. இங்கேயே படுத்துத் தூங்கு. காலையில் நீ மடாலயத்துக்குச் செல்லலாம்’ என்றாள் கிழவி.
அதன்படியே, அந்தச் சிறுவனும் அங்கு தூங்கிப் போனான்.
காலையில் எழுந்து பார்த்தபோதுதான், அந்தக் கிழவியின் உண்மையான கோர முகத்தைக் கண்டான் அந்தச் சிறுவன். அவள் அந்த மலையில் இருக்கும் சூனியக்காரி என்பது அவனுக்குப் புரிந்தது. அவளிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று நினைத்தான்.
அவன் அவளிடம் குளிக்க வேண்டும் என்று சொன்னான்.
‘மிகவும் குளிராக இருக்கிறது. தண்ணீரில் உறைந்து போய்விடுவாய். குளிக்க வேண்டாம்!’ என்றாள் அவள்.
சிறுவனோ குளிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.
வேறு வழியின்றி, அவனது இடுப்பில் நீளமான ஒரு கயிற்றைக் கட்டி, அவனைக் குளிக்க அனுப்பினாள் கிழவி. அவளிடமிருந்து கண் மறைவாகச் சென்றதும் அந்தச் சிறுவன் இடுப்புக் கயிற்றை அவிழ்த்து ஒரு தூணில் கட்டிவிட்டு, அதில் துறவி கொடுத்திருந்த அதிர்ஷ்டக் காகிதங்களில் ஒன்றை எடுத்துச் சொருகினான். ‘சூனியக்காரி கூப்பிடும்போது, எனக்குப் பதிலாக நீ குரல் கொடு!’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்து வேகமாக ஓடினான்.
சூனியக்காரி பானையில் இருக்கும் நீர் நன்றாகக் கொதித்ததும், சமைப்பதற்கு உதவி செய்ய வரச் சொல்லி அவனை அழைத்தாள்.
அந்தக் காகிதமோ சிறுவன் குரலில், ‘நான் குளித்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் பொறு, வருகிறேன்!’ என்று பதில் அளித்தது.இப்படியே இரண்டு மூன்று முறை நடந்தது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் பொறுமை இழந்த அவள், நேரே அந்தக் கயிறு வழியே கடைசி இடத்துக்குச் சென்றாள்.
சிறுவன் தப்பிச் சென்றதை அறிந்து, ஆத்திரமானாள். ‘என்னை ஏமாற்றி ஓடிவிட்ட அவனை விரைந்து சென்று பிடிப்பேன்’ என்று சொல்லித் தேடி ஓடினாள். அவனைக் கண்டு துரத்த ஆரம்பித்தாள்.
அந்தச் சிறுவன் தன்னிடமிருந்த இன்னொரு காகிதத்தை வீசியெறிந்து, ‘நீ பெரிய மணல் குன்றாக மாறு!’ என்றான். உடனே கிழவியின் எதிரில் உயரமான மணற்குன்று தோன்றியது. கிழவி அதில் சிரமப்பட்டு ஏறி, இறங்கி வருவதற்குள், அந்தச் சிறுவன் மடாலயத்தை நெருங்கி விட்டான். அவளும் நெருங்கிவிட, மூன்றாவது காகிதத்தை எறிந்து, ‘நீ ஆறாக மாறு’ என்றான் சிறுவன். கிழவி அந்த ஆற்றைக் கடந்து வருவதற்குள், அவன் மடாலயத்தை அடைந்துவிட்டான்.
”காப்பாற்றுங்கள், குருவே! சூனியக்காரி என்னைத் துரத்தி வருகிறாள்’ என்று துறவியிடம் தஞ்சம் புகுந்தான் அந்தச் சிறுவன். அவனை அங்கிருந்த ஓர் அலமாரிக்குள் ஒளிந்து கொள்ளச் சொன்னார் துறவி.
‘எங்கே அவன்? நான் உடனே அவனைத் தின்னவேண்டும்’ என்று கத்திக் கொண்டே வந்தாள் சூனியக்காரி.
‘மலைக்கிழங்கு பறித்து வருவதாகச் சொல்லி நேற்றே சென்றவன், இன்னமும் திரும்பி வரவில்லையே!’ என்று சொல்லிக் கொண்டே, அரிசி உருண்டைகளை வறுக்கத் தொடங்கினார் துறவி. கிழவிக்கு அந்த மணம் பிடித்திருந்தது.
‘எனக்கு அரிசி கேக்குகளைக் கொடுங்கள்’ என்று நாக்கை சப்புக் கொட்டியபடி கேட்டாள் அவள்.
‘நீ எவ்வளவு கேட்டாலும் தருகிறேன். அதற்கு முன்னால், உன்னுடைய மாயாஜால சக்தியை நான் பரிசோதிக்க வேண்டுமே!’ என்றார் துறவி.
‘என்ன செய்ய வேண்டும், சொல்! செய்து காண்பிக்கிறேன்.’
‘உன்னால் எவ்வளவு உயரமாக ஆக முடியும் என்று காண்பி!’ என்றார் துறவி. அவள் வானத்தைத் தொடும் அளவுக்கு விசுவரூபமெடுத்து நின்றாள்.
‘ஆகா, அற்புதம்! சரி, எவ்வளவு சிறியதாக ஆகமுடியுமோ, ஆகிக் காட்டு, பார்க்கலாம்!’
அவள் சிறிய மொச்சைக் கொட்டை போன்று வடிவெடுத்தாள். உடனே, அந்தத் துறவி அவளைப் பிடித்து, இரண்டு அரிசி கேக்குகளுக்கு இடையே வைத்துப் பற்களால் கடித்து, அவளைச் சாகடித்தார்.
மாற்றிச் சிந்தித்து, மாயாஜாலங்கள் தெரிந்து வைத்திருந்த அவளை எளிதில் வெற்றி கொண்டார் அந்தத் துறவி.