ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
இந்தச் சண்டை முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம் “சீடர்களே... இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும் போல் தெரிகிறது. நீங்கள் இருவரும் அங்கேயிருக்கும் மரத்தில் பழங்களைப் பறித்து வாருங்கள்” என்றார்.
முனிவரிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்தச் சீடர்கள் இருவரும் மரத்தை நோக்கி ஓடினர். ஆனால், அந்த மரத்தின் முன்பாக முள் செடிகள் இருந்ததால் அவர்களால் அந்த மரத்தை நெருங்க முடியவில்லை.
முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் முள் செடிகளைத் தாண்டினான். அந்த மரத்திலிருந்த பழங்களை முடிந்த வரைப் பறித்தான். மரத்திலிருந்து இறங்கிய அவன் மீண்டும் ஒரே தாவலில் முள்செடியைத் தாண்டினான். முனிவரின் முன்னால் வந்து நின்ரான். அவரிடம் பறித்துக் கொண்டு வந்த பழங்களைக் கொடுத்தான்.
இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு அந்தப் பக்கமாக வந்தனர். அவர்கள் இரண்டாம் சீடன் வெட்டி வைத்த பாதை வழியே சென்று, மரத்திலிருந்த பழங்களைப் பறித்துச் சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். இரண்டாவது சீடனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.
இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.
முதலாமவன், “சுவாமி, நீங்கள் இன்னும் எங்களுக்குப் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படிச் சிறந்தவன் என்று சொன்னீர்கள்?” என்று கோபப்பட்டான்.
முனிவர் அவனிடம், “சீடனே, நான் உங்களிருவரையும் பழம் பறிக்கச் சொன்னதே உங்களில் சிறந்தவர் யார்? என்று தெரிந்து கொள்ளத்தான். நீ மரத்தருகே இருந்த முள்செடிகளைத் தாண்டிக் குதித்து, இந்தப் பழங்களைப் பறித்தது வந்தாய். இது உன் சுயநலத்தைக் காட்டுகிறது. ஏனெனில், அதை நீ எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன். இரண்டாம் சீடனோ முள்செடியை வெட்டிப் பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் பழங்கள் கிடைத்தன். இன்னும் பல நாட்கள் இந்தப் பழங்கள் அனைவருக்கும் கிடைக்கும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி” என்றார்.