ஒரு நாள் திருடர்கள் மூன்று பேர் ஒரு இடத்தில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்குள் திருடுவதில் யார் அதிகத் திறமைசாலி என்கிற பேச்சு எழுந்தது. அந்த சமயம் பார்த்து அவர்களின் முன்னால் வியாபாரி ஒருவன் போய்க் கொண்டிருந்தான்.
அவன் அந்த வேளையில் தன் கடையை மூடிவிட்டு அன்றைக்கு வியாபாரத்தில் சேர்த்த பணத்துடன் தன் வீட்டுக்குத் திரும்புவான் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
மூன்று திருடர்களில் ஒரு திருடன், “அதோ அந்த வியாபாரி கொண்டு போகும் பணப்பையை அவனறியாமல் திருடிக் கொண்டு வந்துவிடுகிறேன் பாருங்கள்!” என்று சவாலாகக் கூறினான்.
மற்ற இருவரும் அவனை உற்சாகப்படுத்தினர்.
அவனும் வியாபாரியைப் பின்தொடர்ந்தான்.
வியாபாரி தன் வீட்டை அடைந்தான். கதவைத் தட்டியவுடன் அவன் வீட்டிலிருந்த வேலைக்காரி வந்து கதவைத் திறந்து விட்டாள். உள்ளே சென்ற வியாபாரி, தான் கொண்டுவந்த பணப்பையை முன்கூடத்தில் மேசை மீது வைத்தான். வேலைக்காரியைத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான்.
அந்த வியாபாரி தண்ணீர் குடித்துவிட்டு முகம் கழுவ உள்ளே சென்றான். வேலைக்காரியும் ஏதோ வேலையாக உள்ளே சென்றுவிட்டாள்.
வீடு திறந்திருந்தது. இதுதான் சமயம் என்று திருடன், திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்து, மேசையின் மேலிருந்த பணப்பையைத் திருடிக் கொண்டு வந்து விட்டான்.
மற்ற திருடர்கள் இருவரிடமும் போய், தன் திறமையைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டான். அப்பொழுது மற்றொரு திருடன், “இதிலென்ன திறமை இருக்கிறது? முகம் கழுவுவதற்கு உள்ளே சென்ற வியாபாரி திரும்பி வந்து பார்க்கும் பொழுது பணப்பையைக் காணவில்லை என்றவுடன் அவனது வீட்டு வேலைக்காரியிடம் விசாரிப்பான். அவளும் தனக்குத் தெரியாது, தான் பார்க்கவில்லை என்று சொல்வாள். அந்த வியாபாரி அதை நம்ப மாட்டான். அவளை அடித்துத் துன்புறுத்துவான். அவள் அலறுவாள். பாவம் உன்னால் அநியாயமாக ஒரு பெண் துன்பப்படப் போகிறாள். இதற்குப் பெயரா திறமையான திருட்டு?” என்று கேலி செய்தான்.
திருடி வந்தவனுக்கு கோபம் வந்தது. உடனே அவன், “இதோ பாருங்கள்... நான் அந்த வியாபாரியின் வீட்டிற்குச் சென்று அந்த வேலைக்காரப் பெண்ணை அடிபடாமல் காப்பாற்றி வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். மற்ற இரு திருடர்களும் அந்தப் பெண்ணை அவன் எப்படிக் காப்பாற்றப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள அவனைப் பின் தொடர்ந்தனர்.
திருடன் வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த வியாபாரியின் கையில் பிரம்பு ஒன்று இருந்தது.
கூடத்தில் வேலைக்காரப் பெண் அழுது கொண்டிருந்தாள். இப்பொழுதுதான் விசாரனை தொடங்கி இருக்கிறது என்று திருடன் புரிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனைப் பார்த்து, “ நீ யார்?” என்று கேட்டான் வியாபாரி. அதற்கு அவன், “ஐயா! நான் தங்கள் கடைக்கு எதிர்க்கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளேன். தாங்கள் கடையை மூடும் பொழுது தங்கள் பணப்பையைக் கீழே தவறவிட்டு வந்துவிட்டீர்கள்... இதைக் கவனித்த எங்களின் முதலாளி பணப்பையை என்னிடம் கொடுத்து, தங்களின் வீடு எங்கே இருக்கிறது என்றும் விவரம் சொல்லி, தங்களிடம் பணப்பையைக் கொடுத்து வரச் சொன்னார். தயவுசெய்து பெற்றுக் கொள்ளுங்கள்..!” என்று சொல்லிப் பணப்பையை நீட்டினான்.
அந்த வியாபாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் பணப்பையைப் பெற கையை நீட்டினான்.
ஆனால் அவனோ, “ஐயா! தாங்கள் பணப்பையைப் பெற்றுக் கொண்டதாக ஒரு கடிதம் எழுதிக் கையொப்பம் இட்டு எங்கள் முதலாளிக்குத் தாருங்கள். நான் பத்திரமாகத் தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று எங்கள் முதலாளிக்குத் தெரிய வேண்டாமா?” என்று சொன்னான்.
உடனே வியாபாரி, வீட்டிற்குள் சென்று கடிதம் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தான். அவனும் கடிதத்தை வாங்கிப் படித்து, “சரியாக இருக்கிறது! வீட்டினுள் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பணப்பையை அந்த வியாபாரியின் முகத்துக்கு நேரே ஆட்டிக் காட்டிவிட்டு, பையுடன் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான்.
திருடர்கள் மூவரும், முன்னர் சந்தித்த அதே இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அந்தத் திருடன் மிகவும் பெரிய திறமைசாலி என்று மற்ற இருவரும் ஒப்புக் கொண்டனர்.