நாட்டில் வரி வசூல் செய்ய ஒருவர் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானதும், அந்தப் பதவிக்கு நிறைய பேர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்துள்ளவர்களில் யார் நேர்மையானவர் என்று ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும், அதற்கு என்ன செய்யலாம் என்று தனது மந்திரியிடம் ஆலோசனை கேட்டார் மன்னர்.
மந்திரி, "இந்த வேலைக்கு யார் யார் விண்ணப்பித்துள்ளார்களோ. அவர்களை எல்லாம் நாளை அரண்மனைக்கு வரச் சொல்லுங்கள். நான் நேர்மையான ஆளைக் கண்டுபிடிக்கிறேன்" என்றார்.
எல்லாரும் அரசவைக்கு வந்தனர். "நீங்கள் எல்லோரும் கைகளையும், கால்களையும் தூக்கிப் பயிற்சி செய்யுங்கள்" என்று சொன்னார் மந்திரி.
ஒருவரைத் தவிர எல்லோரும் ஆடாமல் அமைதியாக நின்றனர். பயிற்சி செய்த அந்த ஒருவர்தான் நேர்மையானவர் என்றார் மந்திரி.
“எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் அரசர்.
"நான் இவர்கள் அனைவரையும் இருட்டு அறையின் வழியாக இங்கு வரச் செய்தேன். இருட்டு அறையில் திறந்த சாக்குகளில் நிறைய தங்க நாணயங்கள் வைத்திருந்தேன். இங்கு பயிற்சி செய்ய மறுத்தவர்கள் அனைவரும் அங்கிருந்த தங்க நாணயங்களை தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களைச் சோதனை செய்தால், அந்தத் தங்க நாணயங்கள் கிடைக்கும். நாம் பயிற்சி செய்தால் நம்மிடமிருக்கும் தங்க நாணயம் கீழே விழுந்து நாம் மாட்டிக் கொள்வோம் என்றம் பயத்தில்தான் பயிற்சி செய்ய மறுத்தார்கள். பயிற்சி செய்தவர் மட்டும்தான் நேர்மையானவர்" என்றார் மந்திரி.