காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாக இருந்தது. அவனுக்குக் காட்டில் கேட்ட பயங்கரமான சத்தங்கள் அவனை மேலும் பயமுறுத்தியது. மெதுவாக நடந்தான்.
அவன் பார்வைக்குத் தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்தது.
அவனுக்குப் பயம் அதிகமானது, அவனுடைய உடல் வியர்க்கத் தொடங்கியது. தப்பிக்க வழியே இல்லை என்று நினைத்த அவன் அவனுக்குத் தெரிந்த கடவுள் பெயர்கள் அனைத்தையும் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“இறைவனே என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்…” என்று நினைத்தபடி தனது கண்ணை மூடிக் கொண்டான்.
பயத்தில் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனக்குத் தெரிந்த மந்திரம் ஒன்றை மனதுக்குள் சொல்லத் தொடங்கினான்.
சிங்கம் இதுவரை பக்கத்தில் வந்ததற்கான அறிகுறி தெரியவில்லை.
பயத்துடன் தனது ஒரு கண்ணை திறந்து பார்த்தான். அவனுக்கு ஒரே ஆச்சர்யம். அந்த சிங்கம் இவன் எதிரில் கண்மூடி ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தது.
“நல்ல வேளை நாம் தப்பித்தோம்... மந்திரத்தின் பலன் சிங்கத்தை அமைதிப்படுத்தி விட்டது. மந்திரத்தைத் தொடர்ந்து விடாமல் சொல்லுவோம்...” என்று நினைத்தபடி சொல்லத் தொடங்கினான்.
சிங்கம் அப்போதும் அமைதியாக இருப்பது போல் தோன்றியது.
அவனுக்கும் பயம் குறைந்திருந்தது.
கண்ணைத் திறந்தான். அப்போதுதான் சிங்கமும் கண்ணைத் திறந்தது.
தப்பித்து விட்டோம்… என்று நினைத்தபடி சிங்கத்திடம் சிநேகத்துடன் கை நீட்டி, “வணக்கம் சகோதரா.. மிக்க நன்றி” என்றான்.
சிங்கம், “ வணக்கம்... உணவு சாப்பிடும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம், உனக்கும் இரையாவதற்கு முன்பு இறைவனிடம் வேண்டும் வழக்கமிருப்பது போலிருக்கிறது...” என்றது.