சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்த பஞ்சபாண்டவர்கள் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டியிருந்தது. காட்டில் திரிந்த அவர்களுக்கு ஒரு சமயம் தண்ணீர் கிடைக்காமல் கடுமையான தாகம் ஏற்பட்டது.
நகுலனைப் பார்த்து மூத்தவனான தருமன்," எங்கேனும் சென்று தண்ணீர் கொண்டு வா" என்றான்.
பல இடங்களில் அலைந்த நகுலன் ஒரு இடத்தில் பளிங்கு போல் நீர் நிறைந்த பொய்கை ஒன்று கண்ணில்பட , அதிலிருந்த தண்ணீரைக் கைகளால் அள்ளிக் குடிக்க முயன்றான்.
"என் கேள்விகளுக்குப் பதில் சொல். பிறகு தண்ணீரைக் குடிக்கலாம்" என்று குரல் கேட்டது.
சுற்றிலும் பார்த்தான் அவன். யாரும் அவன் கண்களுக்குஹ் தென்படவில்லை. அந்தக்குரலைப் பொருட்படுத்தாமல் தண்ணீரை அள்ளிக் குடித்தான். அங்கேயே இறந்து விழுந்தான்.
நகுலன் திரும்பாததைக் கண்ட தருமன் அடுத்து சகாதேவனை அனுப்பினான். அவனும் மாயக்குரலை மதிக்காமல் இறந்தான்.
அடுத்தடுத்து வந்த அர்ச்சுணனுக்கும், வீமனுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டது.
தண்ணீர் கொண்டுவரச் சென்ற தம்பிகள் நால்வரும் திரும்பாததைக் கண்ட தருமனும் அந்தப் பொய்கையை அடைந்தான். அங்கே தம்பிகள் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டான்.
தம்பியரைப் பிரிந்த துக்கம் ஒரு பக்கம். தாங்க முடியாத தாகம் ஒரு பக்கம். கைகளால் தண்ணீரை அள்ளிப் பருகப் போனான்.
"தருமா, நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தராமல் தண்ணீரை அள்ளிக் குடித்த உன் தம்பிகள் நால்வரும் மாண்டனர். நீ என் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் தண்ணீரைக் குடிக்கலாம். உன் தம்பிகள் நால்வரையும் உயிருடன் திரும்பப் பெறலாம்" என்ற குரல் ஒலித்தது.
"கேள்விகளைக் கேளுங்கள். முடிந்தவரை பதில் சொல்கிறேன்" என்றான் தருமன்.
அந்தக் குரல் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அளித்தான் தருமன். அவன் தம்பிகளும் உயிர் பெற்றனர்.
அதில் ஒரு கேள்வி. "இந்த உலகில் விந்தையான நிகழ்ச்சி எது?"
அதற்குத் தருமன் தந்த பதில். "நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாள்தோறும் சாகக்கண்டும் நாம் மட்டும் நிலையாக வாழப் போவதாக நினைக்கிறோமே. இதுதான் விந்தையான செயல்."