ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருக்கும்.
அதில் இரண்டு மீன்கள் விளையாடி கொண்டிருக்கும் போது, துள்ளிக் குதித்து விளையாடின. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்தன.
அதில் ஒரு மீன் "அங்கே கரையில் பார்த்தாயா? ஒருவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்? அவன் குரலைக் கேட்டால் மிகவும் அருவருப்பாக இருக்கிறது. அவனைப் பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய் விடலாம்” என்றது.
அந்த மீன் சொன்னதைக் கேட்டு அடுத்த மீன் அதை ஆமோதித்து வேகமாகச் சென்றது. அதன் பின்னால் விளையாட வந்திருந்த அனைத்து மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன.
அவசர அவசரமாக சிறிய மீன்கள் அனைத்தும் உள்ளே சென்றதைப் பார்த்த ஒரு பெரிய மீன், "சிறிய மீன்களே...? எதைப் பார்த்து இப்படிப் பயந்து ஓடி வருகிறீர்கள்...?” என்று கேட்டது.
சிறிய மீன்களில் ஒன்று, “கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் எங்களுக்குப் பயமா இருக்கு, அதான்... வேகமாக வந்து விட்டோம்” என்றது.
“ஓ....! காகமா, அதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. நிறத்தையும் உருவத்தையும் வைத்து யாரையும் தவறாக நினைக்கக் கூடாது” என்று அந்தப் பெரிய மீன் சொன்னது.
சிறிய மீன் குஞ்சுகள், “இந்தப் பெரிய மீனுக்கு ஒன்றுமே தெரியவில்லை, எப்பொழுதும் நமக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும்...” என்றபடி சென்றன.
அடுத்த நாள் வந்தது.
சிறிய மீன் குஞ்சுகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது.
அதை பார்த்த மீன் குஞ்சுகள், " அங்கே பாருங்கள், அழகிய வெள்ளை நிறத்தில் அழகான ஒரு பறவை. உடல் முழுக்க வெள்ளை, அதன் அலகு கூட நீளமாகப் பார்க்கவே எவ்வளவு அழகாக இருக்கு” என்றன.
மீன் குஞ்சுகளின் பேச்சுச் சத்தத்தைக் கேட்ட கொக்கு மெதுவாகக் குளத்தை நோக்கி வந்தது.
இதைப் பார்த்த மீன் குஞ்சுகள், அதன் நடை கூட மிக அழகாக இருக்கிறதே என்று வியந்தன.
உடனே மீன் குஞ்சுகள் அதனுடன் நட்பு கொள்ள் விரும்பின. அவைகள் மகிழ்ச்சியாக “அழகிய பறவையே, உன் பெயரென்ன?” என்று கேட்டன.
உடனே கொக்கு, “என் பெயர் கொக்கு” என்றது.
அங்கிருந்த சிறிய மீன்களில் ஒன்று, “கொக்கு அண்ணே...! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நான் உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்டது.
கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். அது உடனே, “வா, என்னைத் தொட்டுப் பார்” என்றது.
அந்த மீன் குஞ்சு கொக்கை நோக்கித் தாவியது. கொக்கு மீனைக் கவ்வியது.
மாட்டிய மீன், “கொக்கு அண்ணே என்னை விட்டு விடுங்கள்...” என்று கெஞ்சியது.
கொக்கு அந்த மீனை அப்படியே விழுங்கி விட்டது.
இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் “ஆபத்து... ஓடுங்கள்... ஓடுங்கள்” என்று குளத்திற்குள் சென்று மறைந்தன.
அப்போது மீன் குஞ்சுகள், “அன்று அந்தப் பெரிய மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக் கூடாது. அப்படி பழகினால் ஆபத்துதான்” என்று உறுதியடுத்து கொண்டன.
அன்று முதல் அனைத்து மீன் குஞ்சுகளும் மிகக் கவனமாக இருந்தன. மகிழ்ச்சியாக வாழ்ந்தன.