ஜெர்மன் நாட்டில் ஹாட்டோ என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் தீய குணமுடையவன், இரக்கம் சிறிதும் இல்லாத கல்நெஞ்சம் கொண்டவன்.
அவன் காலத்தில் அங்கு பஞ்சமேற்பட்டது. அப்போது அளவிற்கு அதிகமான தனியங்களை சேகரித்துக் களஞ்சியங்களில் பதுக்கி வைத்து ஏழைகளுக்குச் சிறிதும் கொடுக்காமல், அநியாய விலைக்கு விற்று வந்தான். அதில் பணம் அதிகம் கிடைத்ததில் பெரும் சந்தோஷமாக கவலைகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்தான்.
நாளடைவில் அவனது சேமிப்புக் கிடங்கில் தானியங்கள் இருப்பதை அறிந்து ஏராளமான எலிகள் அதனுள் புகுந்து மூட்டைகளைக் கடித்துக் குதறித் தானியங்களை நாசம் செய்தன. அதை கண்ட ஹாட்டோ தினமும் எலிப்பொறிகளை வைத்து அவைகளைப் பிடித்துக் கொன்று வந்தான். இருந்தாலும் எலிகள் அதிகமானதே தவிர குறையவில்லை.
தான் பதுக்கி வைத்துள்ள தானியங்கள் எல்லாவற்றையும் இந்த எலிகளே தின்று தீர்த்து விட்டால் என்ன செய்வது? என்று ஆத்திரமுற்ற ஹாட்டோ அவைகளை ஒரேயடியாக அழிக்க எண்ணினான். இதற்காக அங்குள்ள ஏழைகள் பலரைக் கூப்பிட்டுச் சேமிப்புக் கிடங்கினுள் எலிகள் இருக்கின்றதால் தானிய மூட்டைகளை அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதற்கு உதவினால் அவர்கள் எல்லோருக்கும் உணவளித்துக் கூலியாகத் தானியங்களும் தருவதாகக் கூறினான்.
அந்த ஏழைகளும் அவனின் வார்த்தைகளை நம்பி, அவன் சொன்னது போல தானிய மூட்டைகள் யாவற்றையும் அங்கிருந்து எடுத்து மற்றொரு இடத்தில் பத்திரப்படுத்தினார்கள். அவர்கள் அப்படி தானிய மூட்டைகளை நகற்றும் போது அதனுள் இருந்து ஏராளமான எலிகள் தாவிக் குதித்து, அங்கிருந்த சந்து பொந்துகளில் ஓடி ஒளிந்தன.
எல்லா வேலைகளும் முடிந்தவுடன் அன்றிரவு உணவளிப்பதாகக் கூறி, அவர்களை அங்கு வரவழைத்து எலிகளோடு அவர்களும் சாகட்டும் என்று சேமிப்புக் கிடங்கினைப் பூட்டி நெருப்பு வைத்து விட்டான்.
தானியங்களை நாசப்படுத்திய எலிகளாலும், அந்த ஏழைகளாலும் இனி நமக்கு எந்தத் தொந்தரவும் இல்லை, நமக்கு தொல்லை விட்டது என்று எண்ணி கவலையேபடாமல் தூங்கப் போனான்.
இதையறிந்த ஏழை மக்கள் பெரும் கோபத்தோடு கூட்டமாக ஹாட்டோவின் மாளிகையின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இதைப் பார்த்த ஹாட்டோவும் மிகுந்த கஷ்டப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடினான். அவர்கள் விடாமல் அவனை விரட்டிப் பிடித்து எல்லோருமாக சேர்ந்து, அவனைக் காயப்படுத்தி எழுந்து நடக்க முடியாமல் செய்து விட்டார்கள்.
அவன் சேர்த்து வைத்திருந்த தானியங்களும் பறி போய்விட்டது.
ஹாட்டோ தன் வினை தன்னைச் சுடும் என்பதை நினைத்து நொந்து போனான்.