இராமபுரம் என்ற ஊரில் பெரியசாமி என்றொருவன் வசித்து வந்தான். பாடலிபுரம் என்ற ஊரிலிருந்த விவசாயி ஒருவனின் மகளைத் திருமணம் செய்து கொண்டான்.
இரு ஊர்களுக்கும் இடையிலான தொலைவு அதிகமாக இருந்ததால், அவனால் அடிக்கடி மாமனார் வீட்டுக்குப் போக முடிவதில்லை.
கடைசியாக அவன் போய் வந்த போது அவன் காதுகள் நன்றாக இருந்தன. பின்னர் ஒரு விபத்தில் அகப்பட்டுக் கொண்டபோது அவனுடைய இரண்டு காதுகளும் செவிடாகி விட்டன. இது அவனுடைய மாமனார் வீட்டுக்குத் தெரியாது.
திடீரென்று பெரியசாமியின் மாமனார் நோய் வாய்ப்பட்டார். நோய்வாய்ப்பட்டிருக்கும் மாமனாரைப் பார்ப்பதற்காகப் பாடலிபுரம் சென்றான் கணபதி. போகும் வழியில் தான் செவிடாகி இருப்பதை அவர்களுக்குக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தான்.
அவ்வாறானால் மாமனார் சொல்வது எப்படிக் கேட்கும்? அவர் சொல்வதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? என்று நினைத்தான் பெரியசாமி.
முதலில் போன உடனேயே நாமே பேச்சை ஆரம்பிப்போம்.
போனதும், இப்போது உங்கள் உடல் நிலை எப்படியிருக்கிறது? என்று கேட்போம்.
அதற்கு அவர், முன்னைவிடச் சற்று பரவாயில்லை என்று சொல்லுவார். நாம் அதற்கு இப்பொழுதுதான் என் மனம் மகிழ்ச்சியடைந்தது என்று சொல்லுவோம்.
அடுத்தபடியாக, இப்போது என்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்போம்.
அவர், ஒரு மருந்தின் பெயரைச் சொல்லுவார்.
அதற்கு, அதுவே சிறந்த மருந்து. அதையே தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லுவோம்.
அதற்கு அடுத்தபடியாக, எந்த வைத்தியரிடம் காட்டுகீறிர்கள்? என்பதற்கு ஒரு வைத்தியரின் பெயரைச் சொல்லுவார்.
அவர் பிரசித்தமான வைத்தியர். நல்ல கைராசிக்காரர். தொடர்ந்து அவரிடமே வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாம் என்று நினைத்தவறாக மாமனார் வீட்டுக்குச் சென்றான்.
நேரே மாமானாரின் படுக்கையருகே சென்றான் பெரியசாமி.
மாமனாரைப் பார்த்ததும், “மாமா, உங்கள் உடம்பு இப்பொழுது எப்படியிருக்கிறது?” என்று கேட்டான்.
மாமனார் மிகவும் சோகத்துடன், “என்ன சொல்வது? நாளுக்கு நாள் வியாதி அதிகமாகிக் கொண்டே போகிறது. என்னால் தாங்க முடியவில்லை” என்றார்.
அதற்கு செவிட்டுப் மாப்பிள்ளை உடனே, “இப்பொழுது தான் என் மனம் மகிழ்ச்சியடைந்தது” என்றான்.
இதைக் கேட்டதும் மாமனாருக்குக் கோபமாய் வந்தது.
செவிட்டு மாப்பிள்ளை உடனே, “இப்பொழுது என்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.
எரிச்சலுடன் இருந்த மாமனார், “விஷம்” என்றார்.
இதைக் கேட்ட செவிட்டு மாப்பிள்ளை முன்பே தயாரித்து வைத்திருந்த, “ஆ, அதுதான் நல்ல மருந்து. அதையே தொடர்ந்து சாப்பிடுஙகள்” என்ற பதிலைக் கூறினான்.
இதைக் கேட்டதும் மாமனாரின் கோபம் எல்லை கடந்து போய் விட்டது.
இச்சமயத்தில் செவிட்டு மாப்பிள்ளை மூன்றாவது கேள்வியான “யாரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டான்.
கோபத்தின் எல்லையிலிருந்த மாமனார், “எமனிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
அதற்குச் செவிட்டு மாப்பிள்ளை, “ஓ அவரே சிறந்த வைத்தியர், அவரிடமே தொடர்ந்து நீங்கள் வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான்.
இதற்குமேல் மாமனாரால் பொறுக்க முடியவில்லை.
படுக்கையிலிருந்து எழுந்து மருமகனின் கன்னத்தில் ஓங்கி அடித்தார்.
என்ன ஆச்சரியம்,
மாமனார் அடித்த அடியின் அதிர்ச்சியில் இத்தனை நாட்களாகக் கேட்காமல் இருந்த காது அவனுக்குக் கேட்க ஆரம்பித்தது. காது கேட்க ஆரம்பித்தவுடன் நடந்த செய்தியை உணர்ந்து கொண்டான் பெரியசாமி.
“மாமா, என் காது இரண்டும் ஒரு விபத்தில் செவிடாகி விட்டன. ஒரு வைத்தியர் இதற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டுமென்றார். அதற்காகத் தான் உங்களிடம் இம்மாதிரிக் கேள்விகள் கேட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்”
“உங்களுடைய அதிர்ச்சி வைத்தியத்தால் என் செவிடு குணமாகி விட்டது. அதைப் போல உங்களுடைய நோயும் பூரணமாகக் குணடைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றான் பெரியசாமி.