ஒரு ஊரில் ஒரு வயசான பாட்டி தனியாக வசித்து வந்தாள்.
அந்த ஊரில் அப்போது திருடர்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. அடிக்கடி அந்த ஊரில் யார் வீட்டிலாவது பொருட்கள் திருடு போய்க் கொண்டே இருந்தன.
ஒரு நாள் அந்தப் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது.
உள்ளே போன பாட்டிக்குத் தன் வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.
அவனை எப்படியும் தப்பிக்க விடாமல் புத்திசாலித்தனமாக பிடிக்க வேண்டும் என்று நினைத்தபடி ஒரு தந்திரம் செய்தாள்.
அங்கிருந்த விளக்கு முன் நின்று கொண்டு, “மாய விளக்கே, என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது? என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை?” என்றாள்.
இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம்... பேசும் விளக்கா...? என்று நினைத்தபடி எட்டிப் பார்த்தான்.
விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, “கோபமில்லையா?அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி, இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்”
மீண்டும் விளக்கு காற்றில் அசைய, “ஓ, எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா?” என பாட்டி கேட்டாள்.
திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவன், “நமக்கு மட்டும் ஒன்றும் கேட்கவில்லை. விளக்கு ஆடுவது தெரிகிறது. ஆனால், இந்தக் கிழவி பேசுகிறாளே...” என்று குழம்பினான்.
“மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன்” என்றபடி பாட்டி, “உதவி, உதவி, என்னைக் காப்பாற்றுங்கள்...” என்று உரக்கக் கத்தினாள்.
அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தனர். அங்கு மறைந்திருந்த திருடனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அருகிலுள்ளவர்கள் பாட்டியிடம் உங்களுக்குத் துணைக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டபோது, “வேண்டாம் எனக்குத்தான் மாய விளக்குத் துணை இருக்கே...” என்று சிரித்தாள்.
பாட்டியின் சமயோசித புத்தி... அவளைக் காப்பாற்றியது.