அரசன் ஒருவன் தன் அமைச்சனோடு நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தான்.
வழியில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவன் காலருகே பெரியபாம்பு ஒன்று படம் எடுத்து நின்று கொண்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசன், "உழவனே, உன் அருகே கொடிய பாம்பு படம் எடுத்துக் கொண்டிருக்கிறது. தப்பித்து ஓடு" என்று உரத்த குரலில் கத்தினான்.
ஆனால் அவனோ எதுவுமே நடக்காதது போலத் திரும்பிப் பார்த்தான். படம் எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பாம்பை அச்சமின்றித் தன் கையில் பிடித்துத் தூக்கி எறிந்தான்.
வியப்படைந்த அரசன், "உழவனே, கொடிய நஞ்சுடைய பாம்பு அது. அதை நீ பிடித்த போது உன்னைக் கொத்தியிருந்தால் உன் உயிர் போயிருக்கும். எப்படியோ தப்பிவிட்டாய்." என்றான்.
"அரசே! இந்த நிலத்தில் உழும்போது எத்தனையோ பெரிய ஆபத்துகளைச் சந்தித்து இருக்கிறேன். அந்த ஆபத்துகளுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிய ஆபத்தாகத் தெரியவில்லை." என்று சாதாரணமாகச் சொன்னான்.
"கொடிய பாம்பு கடிப்பதை விட பெரிய ஆபத்து இங்கே என்ன உள்ளது?" என்று கேட்டான் அரசன்.
"அரசே! இந்த நிலத்தில் நான் நாள் முழுவதும் உழைக்காவிட்டால் என் குடும்பம் பசியால் வாட நேரிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இரவும் பகலும் இங்கு உழைக்கிறேன். இந்த பாம்புகளுக்கு அஞ்சினால் நான் வாழ்க்கை நடத்த முடியாது." என்றான்.
இதைகேட்டு மகிழ்ந்த அரசன்," அமைச்சரே இவனுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.
"வளமான நிலங்களை இவனுக்கு அளியுங்கள். இந்த ஊரிலேயே இவனைப் பெரும் செல்வந்தனாக்குங்கள்" என்றார் அமைச்சர். அரசனும் அந்த உழவனுக்கு அதிகமான நிலங்களைப் பரிசாக வழ்ங்கினான்.
சில ஆண்டுகள் கழிந்தன. அரசனும் அமைச்சரும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள். ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த அந்த உழவன் அவர்களை வணங்கினான் அரசன்.
அவன் கையில் பெரிய கட்டுப் போட்டிருப்பதைக் கண்ட அரசன்,"உன் கையில் கட்டுப் போட்டிருக்கிறாயே? ஏன்?" என்று கேட்டான்.
"அரசே ஒரு முள் என் கையைக் கீறிவிட்டது. அது பெரிய புண்ணாகிவிட்டது. மருத்துவர் காயத்திற்குக் கட்டுப்போட்டு ஒரு வாரம் எந்த வேலையும் செய்யாமல் என்னை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார்" என்றான் அவன்.
வியப்படைந்த அரசன், "அமைச்சரே, அன்று இவன் கொடிய பாம்பிற்கு அஞ்சவில்லை. அதைக்கையில் பிடித்துத் தூக்கி எறிந்தான். ஆனால் இன்று ஒரு முள் குத்தியதற்காகக் கையில் கட்டு போட்டுக்கொண்டு ஓய்வெடுக்கிறான். இந்தத்தலைகீழ் மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே?" என்றான்.
"அரசே! அன்று அவன் ஏழை. உழைத்துப் பிழைத்தான். அதனால் அவன் பாம்பிற்கு அஞ்சவில்லை. இன்றோ அவன் செல்வந்தன். உழைப்பின்றி இன்பத்தை அனுபவித்து வருகிறான். காலமும் சூழ்நிலையும் மாறும்போது அவனும் மாறிவிட்டான். " என்றார் அமைச்சர்.