அழகு எது? அவலட்சணம் எது?
ஒரு நாள் அழகும் அவலட்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்து கொண்டன.
அப்போது அழகு அவலட்சணத்திடம், “நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா?” என்று கேட்டது.
அவலட்சணமும் சரி என்று சொன்னது.
இரண்டும் தங்கள் உடைகளைக் கடற்கரையில் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றன.
சிறிது நேரம் கழித்து குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது. அது கரையிலிருந்த அழகின் உடைகளை அணிந்து கொண்டு சென்று விட்டது.
நீண்ட நேரம் கடலில் நீராடிய அழகு தன் உடைகளைக் காணாமல் தவித்துப் போனது.
ஆடையில்லாமல் தெருவில் போகக் கூச்சமாக இருந்ததால், வேறுவழி இல்லாமல் அவலட்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.
அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும், அவலட்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சிலர், நிஜமான அழகை அடைந்தவர்களின் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அவர்களை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர், அழகின் உடைகளில் மயங்கி அவலட்சணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.