அப்படியா?
ஜப்பானில் வாழ்ந்த ஒரு தூய்மையான ஜென் ஞானி ஹக்கூயின், அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது.
அதே ஊரில் வசித்த அழகிய பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். பெற்றோர் எவ்வளவு மிரட்டியும் யார் அதற்குக் காரணம் என்று சொல்ல மறுத்த அவள், கடைசியில் தயக்கத்துடன் 'ஹக்கூயின்' என்றாள்.
ஊர்மக்கள் திரண்டு போய் அந்த ஞானியைத் திட்டி விசாரித்த போது, “அப்படியா?” என்றார் அந்தத் துறவி மென்மையாக.
குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உறவினர்கள் அதை எடுத்து அவரிடம் வந்து, 'இந்தக் குழந்தையை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்!' என்றனர்.
“அப்படியா?” என்று புன்னகையுடன் கேட்டு, அந்தக் குழந்தையை ஹக்கூயின் ஓராண்டு காலம் ஒரு தாயைப் போல கண்ணுங்கருத்துமாக வளர்த்தார்.
அந்த ஓராண்டில் ஊரே அவரை ஒதுக்கி வைத்தது.
இது கண்டு குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மனம் வருந்தி, பெற்றொரிடம் 'நான் தப்பு செய்து விட்டேன். என் குழந்தைக்குத் தந்தை, காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன்' என்றாள்.
ஊர்மக்கள் ஓடிச்சென்று ஹக்கூயினிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
'தவறு செய்து விட்டோம். குழந்தையைத் திருப்பித் தந்து விடுங்கள்' என்றார்கள்.
“அப்படியா?”என்று அதே மென்மையான புன்னகையுடன் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார் ஹக்கூயின்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.