ஒரு ஊரில் கண்ணுச்சாமி என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர்.
இதைக் கேட்டுக் கேட்டு அவருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். முனிவரிடம் சென்று அவர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார்.
"கடவுளை நினைத்துத் தவம் செய். அவர் உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..." என்று அந்த முனிவர் கூறினார்.
கண்ணுச்சாமியும் கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.
"பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?'' கடவுள் கேட்டார்.
"தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார் என்று அந்த முனிவர் சொன்னார், அதனால்...'' என்றார் கண்ணுச்சாமி.
"ஆமாம், உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்...'' என்றார் கடவுள்.
"அதான் கேட்டேனே வரம்... அதைக் கொடு...'' என்றார் கண்ணுச்சாமி.
இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் வரம் கொடுக்க வேண்டுமென்று தோன்றி விட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்...! அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும்.
“என்ன செய்யலாம்...?” என்று கடவுள் யோசித்தார்.
"பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே உனக்கு வரமாகக் கொடுக்கின்றேன்... பெற்றுக் கொள்...''
"அய்...யய்ய....யோ... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே...!'' என்றார் கண்ணுச்சாமி.
"அதான்...'' என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! மற்றவைகளெல்லாம் வீணாகிப் போய்விடும்!