அவனும் மாறிவிட்டான்
அக்பர் அரசியாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்ட பின் இலையில் இருந்த அனைத்து வாழைப்பழங்களையும் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார்.
அப்போது அக்பரிடம் முக்கியமான செய்தி ஒன்றினைக் கூறுவதற்காக பீர்பால் அங்கு வந்தார்.
"பீர்பால், இப்பொழுதுதான் உங்களை நினைத்தேன், நீங்களே வந்துவிட்டீர்கள். இங்கே பாருங்கள் இலையில் வைத்த அனைத்து வாழைப்பழங்களையும் அரசியார் சாப்பிட்டுவிட்டார்." என்றார் கேலியாக.
அக்பரின் பேச்சைக் கேட்ட பீர்பால் சிரித்துக் கொண்டே, "அரசே, அரசியாரின் இலையில் இருக்கும் தோல்களைப் பார்க்கும் போது எல்லாப் பழங்களையும் அவரே காலி செய்திருக்கிறார் என்று தெரிகிறது" என்றார்.
"அப்படி கூறுங்கள் பீர்பால், எனக்கு ஒரு பழத்தைக் கூட வைக்காமல் அவளே தின்று தீர்த்து விட்டாள்." என்றார் அக்பர்.
"அரசே மன்னிக்க வேண்டும். அரசியார் பழங்களை மட்டும் தின்றுவிட்டுத் தோலை இலையிலேயே வைத்து விட்டார். ஆனால் தாங்களோ பழத்தின் தோலைக்கூட விடாமல் சேர்த்து சாப்பிட்டு விட்டீர்களே. உங்கள் இலையில் தோல் ஒன்றைக்கூட காணோமே..." என்றார் பீர்பால்.
பீர்பால் கூறியதைக் கேட்டு அரசியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். "தாங்கள் கூறுவது உண்மைதான் பீர்பால். நல்லவேளை என் இலையில் இருந்த பழத் தோல்களையும் அரசர் சாப்பிடாமல் விட்டு வைத்தாரே!" என்று அரசியார் கிண்டலாகக் கூறியதும் அக்பருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.