பணக்காரர் ஒருவர் தனது வீட்டுக்கு மற்றொரு பணக்காரரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தினர் வரும் போது வசதியான அந்த வீடு மிகவும் பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகச் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் பணியும் நடந்தது.
அந்த வீட்டில் நடுவிலிருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து அதைச் சுத்தம் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால், அந்தப் பணக்காரர் ஒருவனைப் பார்த்து, “ஏன் மேலே இருந்து சுத்தம் செய்கிறாய், கீழே இருந்து சுத்தம் செய்து கொண்டு போ” என்றார்.
அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதைக் கேட்டு விழித்தார்கள். அந்தப் படிக்கட்டுகளை எப்படியும் சுத்தம் செய்யலாம். ஆனால் எது அதிகப் பலனைத் தரும். கீழே இருந்து சுத்தம் செய்தால், அதிக பட்சம் நான்கு படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யலாம். அதற்கும் மேல் சுத்தம் செய்ய, சுத்தம் செய்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே...?
எப்படிப் படிக்கட்டுகளை மேலே இருந்து சுத்தம் செய்தால், அது அதிக பலனைத் தருமோ, அதே போல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால், அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். கீழிருப்பவர்களைப் பார்த்து ஒருவர் புகைப்பிடிப்பதோ அல்லது நல்ல செயல்கள் செய்வதோ மிகமிகக் குறைவு. ஆனால் அதே செயலை மேல்நிலையிலுள்ள ஒரு தலைவரோ அல்லது சிறப்பு பெற்றவரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும்.
மாற்றம் இரு பக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால்தான் இன்னும் நன்றாக இருக்கும்.